* 22 ஆயிரம் ஏக்கர் உப்பளம் மூழ்கின, நெல்லையிலும் கடும் பாதிப்பு
நெல்லை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் நேற்று 3வது நாளாக மழை நீடித்தது. தூத்துக்குடியில் கொட்டித்தீர்த்த கனமழையால் அந்த மாவட்டம் வெள்ளத்தில் மிதக்கிறது. தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் 22 ஆயிரம் ஏக்கர் உப்பளங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. பல பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை நேற்று 3வது நாளாக நீடித்தது.
இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. கடனாநதி, ராமநதி அணைகள் நிரம்பியதால் உபரி நீர், காட்டாற்று பகுதிகளில் இருந்து ஓடி வரும் மழை நீர் தாமிரபரணியில் கலக்கிறது. இதனால் ஆற்றில் விநாடிக்கு 55 ஆயிரம் கன அடி தண்ணீர் சீறிப் பாய்கிறது. இதனுடன் சிற்றாற்றின் வெள்ள நீரும் சீவலப்பேரி அருகே கலப்பதால் தூத்துக்குடி மாவட்டம், மருதூர் அணையில் இருந்து விநாடிக்கு 65 ஆயிரம் கன அடி நீர் செல்கிறது. தாமிரபரணியின் கடைசி அணையான ஸ்ரீவைகுண்டம் அணையில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் பாய்கிறது.
இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி – திருச்செந்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. போக்குவரத்து மாற்றுவழியில் திருப்பி விடப்பட்டுள்ளது. வி.கே.புரம் தாமிரபரணி நகர், திருவள்ளுவர் நகரில் வெள்ள நீர் புகுந்தது. அங்கு தவித்த 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகளில் முடங்கினர். முக்கூடல் பகுதியில் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. முக்கூடல் பகுதியில் மரம் விழுந்து தனியார் திருமண மண்டபம் மற்றும் தனியார் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்தது. இதேபோன்று மழைக்கு பல வீடுகளின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
வீரநாயக்கன்தட்டு, அத்திமரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை மழை நீர் சூழ்ந்தது. வாகைக்குளம் டோல்கேட் பகுதியில் 4 வழிச்சாலையில் ஆறாக தண்ணீர் ஓடுகிறது. தூத்துக்குடி மாநகர பகுதிகளில் பெரும்பாலான சாலைகளில் மழை வெள்ளம் நிறைந்துள்ளதால் 60%க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. வேம்பார் முதல் பெரியதாழை வரையில் சுமார் 22 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் நீரில் மூழ்கின. மாவட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. கோவில்பட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. புன்னக்காயல் பகுதி முழுவதையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இங்கு 200க்கும் மேற்பட்ட வீடுகள் மழைநீரில் மிதக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 6,000 குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்து உள்ளது. தூத்துக்குடி அடுத்த புதுக்கோட்டை- கூட்டாம்புளி இடையே உள்ள பெரியபிராட்டி குளக்கரை உடைந்து தண்ணீர் வெளியேறி புதுக்கோட்டை ஊருக்குள் புகுந்தது. இதனால் புதுக்கோட்டை- கூட்டாம்புளி சாலையை மூழ்கடித்தவாறு வெள்ளநீர் பாய்வதால், புதுக்கோட்டை-கூட்டாம்புளி-சாயர்புரம்-ஏரல் மற்றும் ஸ்ரீவைகுண்டம் வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. ஒரு சில பேருந்துகள் மட்டும் தூத்துக்குடி, புதுக்கோட்டை, தேரிரோடு, சாயர்புரம், சுப்பிரமணியபுரம் மற்றும் ஏரல் இடையே இயக்கப்படுகிறது.
இதனால் புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் 2 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு சிவராமமங்கலம், அப்பன்கோவில் பகுதியில் தண்ணீர் புகுந்தது. 150 வீடுகளை வெள்ளம் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆய்வாளர் பாலகுரு தலைமையில் 25 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்பு படையினர் ஸ்ரீவைகுண்டத்தில் தயாராக இருக்கின்றனர். ஏரல் தாமிரபரணி ஆற்றில் தாம்போதி பாலம் மூழ்கி 2வது நாளாக ஏரல்- குரும்பூர் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடைக்காரர்கள், பொருட்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றி வருகின்றனர். தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து வெள்ளம் நீடிப்பதால், மீட்புப் பணிக்காக 10க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் நெல்லை வந்துள்ளன. மேலும் 20க்கும் மேற்பட்ட ராட்சத மின் மோட்டார்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஜேசிபி உள்ளிட்டவைகளும் வந்துள்ளன. மழை, வெள்ள நிலவரத்தை நெல்லை மாவட்டத்தில் முகாமிட்டு மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளார். கண்காணிப்பு அலுவலர் சந்தீப் நந்தூரி, கலெக்டர் கார்த்திகேயன் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகளும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் 1117 ஹெக்டேரில் நெற்பயிர்களும், 210 ஹெக்டேரில் சிறு தானிய பயிர்களும், 159.40 ஹெக்டேரில் வாழை பயிர்களும் நீரில் மூழ்கியுள்ளன. மாவட்டத்தில் 19 வீடுகள் சேதமடைந்துள்ளன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 70 குடும்பங்களைச் சேர்ந்த 225 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று காலை 8 மணி நிலவரப்படி, ஊத்து எஸ்டேட்டில் 23 செமீ மழை பதிவானது. நாலுமுக்கு எஸ்டேட்டில் 22 செமீ, காக்காச்சியில் 19.2 செமீ, மாஞ்சோலையில் 17.9 செமீ, பாபநாசத்தில் 14.9 செமீ, சேர்வலாறில் 13.7 செமீ, மணிமுத்தாறில் 9.48 செமீ மழை பதிவாகியுள்ளது.
நெல்லை மாநகரம் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 2 நாட்களாக பெய்த மழையால் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. தற்போது பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் வடிந்து உள்ளது. தாழ்வான பகுதிகளில் மட்டும் மழைநீர் தேங்கி உள்ளது. 2 நாட்களாக மழைநீர் தேங்கியதால் நெல்லை மாவட்டத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் தருமபுரம் மடம் ஊராட்சிக்குட்பட்ட இப்ராகிம் நகரில் 40க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு அருகில் உள்ள உறவினர் வீடுகளில் தங்க வைத்துள்ளனர்.
நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி கடனாநதி அணை 26 செமீ, ராமநதி அணை 15.4செமீ, செங்கோட்டை 14 செமீ, குண்டாறு-13.8 செமீ மழை பதிவானது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் விசைத்தறி கூடங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் விசைத்தறி கூடங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.
நெல்லை, தென்காசியில் வெள்ளம் படிப்படியாக குறைந்துள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் தொடர்ந்து மழையும், வெள்ளமும் சூழ்ந்திருப்பதால் மக்கள் பரிதவிப்பிற்குள்ளாகி இருக்கின்றனர். தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு, பாபநாசம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் குற்றாலம் அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை 3வது நாளாக நீட்டிக்கப்பட்டது.
இதேபோல் மதுரை, சிவகங்கை, விருதுநகர், கடலூர், விழுப்புரம், டெல்டா மாவட்டங்கள் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து சேதமடைந்தன. குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்து உள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் ஒரு லட்சம் ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது.
* மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் திடீர் நிலச்சரிவு
தென்காசி மாவட்டம், கடையத்தில் இருந்து ராமநதி செல்லும் வழியில் உள்ள ஜம்பு நதி பாலத்தில் அளவுக்கு அதிகமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நாகல்குளம் கால்வாய் பகுதியில் ஏற்பட்ட உடைப்பால் 50 ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின. கனமழை காரணமாக கடனா நதி அணை மேற்கு தொடர்ச்சி மலையில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் 2 மிகப்பெரிய மலை குன்றுகள் சரிந்துள்ளது. இதனால் மிகப்பெரிய மரக்கட்டைகள் மற்றும் மண் சரிவுகள் தண்ணீரில் மிதந்து வந்தது. மழை பெய்து வரும் சூழலில் காட்டுப்பகுதி என்பதால் அங்கு சென்று பாதிப்புகளை ஆய்வு பணிகளை மேற்கொள்ள முடியாத சூழல் உள்ளது. எனவே மழை நின்ற பிறகு பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய வனத்துறை முடிவு செய்துள்ளது.
* சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பெய்துவரும் தொடர் கனமழையால் தாமிபரணி ஆற்றில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேலநத்தம், கருப்பந்துறை தாமிரபரணி ஆற்றுப்பாலம், குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோயில் உள்ளிட்டவைகள் தண்ணீரில் மூழ்கியது. நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது. வண்ணார்பேட்டை அண்ணாசாலையில் உள்ள பாலப்பழ ஓடையில் அதிகப்படியான மழைநீர் வந்ததால் உடைப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதுபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது.
தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிவருவது குறித்து சமூக வலைதளத்தில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும், கொக்கிரகுளம் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது. கடந்த ஆண்டு வந்த வெள்ளம் காட்சிகளை தற்போதுள்ள நிலை போன்று சித்தரித்து தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. எனவே இதுபோன்ற தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி பொதுமக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
* ‘கணக்கெடுப்புக்குப்பின் நிவாரண நிதி’
அமைச்சர் கே.என்.நேரு அளித்த பேட்டியில், நெல்லை மாநகராட்சி பெரியார் சந்திப்பு பேருந்து நிலையத்தில் நிரந்தரமாக வெள்ளநீரை தடுப்பதற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை தொடங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சேதமடைந்த சாலைகளை உடனடியாக சரிசெய்திட தேவையான நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
மழை, வெள்ளத்தால் நெல், வாழைகள், கரும்பு ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து கணக்கெடுப்பு நடத்தி வருகிறோம். சேதமடைந்த வீடுகள், உயிரிழந்த கால்நடைகளும் கணக்கிடப்பட்டு வருகிறது. இது நிறைவு பெற்ற பிறகு முதல்வரின் பார்வைக்கு கொண்டு சென்று தேவையான நிவாரண நிதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
* தேசிய பேரிடர் மீட்பு படையினர் முகாம்
நெல்லை மாவட்டம் முக்கூடலில் வெள்ளத்தால் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதையடுத்து ராதாபுரத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 30 வீரர்கள் கொண்ட குழுவினர் முக்கூடல் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
* சென்னை – தூத்துக்குடி விமானங்கள் ரத்து
மோசமான வானிலை காரணமாக விமான சேவை, நேற்று பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சென்னையில் இருந்து 4 விமான சேவையும், பெங்களூருவில் இருந்து ஒரு விமான சேவையும் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. இதில் சென்னையில் இருந்து காலை 7.35 மணிக்கு வந்த விமானம் தவிர மற்ற 4 விமான சேவையும் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
* குற்றாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட யானை பலி
குற்றாலம் மெயினருவியில் தடாகம் மற்றும் பாலத்தை தாண்டி நேரடியாக ஆற்றில் ஆக்ரோஷமாக வெள்ளம் கொட்டியது. இங்குள்ள கார் பார்க்கிங் பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டது. நேற்று மதியம் மெயினருவியில் இருந்து தண்ணீர் வழிந்து ஓடும் ஆற்றில் குற்றாலநாதர் கோயிலுக்கு சொந்தமான தென்றல் பவனத்திற்கு பின்புறமுள்ள புதர்களுக்கு அருகில் யானை ஒன்று இறந்து உடல் சற்று உப்பிய நிலையில் கிடந்தது. வனத்துறையினர் ஆய்வு செய்ததில் சுமார் 4 வயது ஆண் யானை என தெரிந்தது. நேற்று முன்தினம் இரவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மெயினருவிக்கு மேலே வனப்பகுதியில் இருந்து வெள்ளத்தில் இழுத்து வரப்பட்டிருக்கலாம் என்று கருதுகின்றனர்.
* திருச்செந்தூருக்கு வர வேண்டாம்: கலெக்டர் வேண்டுகோள்
தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலும், நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகவும், தாமிரபரணி ஆற்றில் மிக அதிகமாக வெள்ள நீர் வந்து கொண்டிருக்கிறது.
தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையும், நெல்லையில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலையும், ஏரல் வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலையும் மழை வெள்ளத்தால் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு இன்று (15ம் தேதி) வெளியூரில் இருந்து பக்தர்கள் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
* சீவலப்பேரி தனித்தீவானது
சீவலப்பேரி தாமிரபரணி தரைமட்ட ஆற்றுப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்வதால் பாளையில் இருந்து செல்லும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் சிற்றாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதியில் உள்ள தரைப்பாலத்தையும் வெள்ளம் மூழ்கடித்து செல்கிறது. இதனால் கங்கைகொண்டான் மாவு மில், குப்பக்குறிச்சி வழியாக செல்லும் வாகனங்களும் சீவலப்பேரிக்கு ெசல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சீவலப்பேரி தனித்தீவாக காட்சியளிக்கிறது.
* தூத்துக்குடி- திருச்செந்தூர் போக்குவரத்து நிறுத்தம்
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் புதிய பாலம் இறங்கியதால், அதில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தில், புதிய பாலம் மேலும் இறங்கியது. ஆத்தூர் பழைய பாலத்தை தொட்டபடி தண்ணீர் சென்றதால் நேற்று முன்தினம் இரவு முதல் அவ்வழியாக அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு உள்ளது. தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வாகனங்கள் முக்காணி, ஏரல், சிவகளை, பேட்மாநகரம், ஆழ்வார்திருநகரி, குரும்பூர் வழியாக திருச்செந்தூர் செல்கிறது.
The post 3வது நாளாக கொட்டித் தீர்த்த மழை வெள்ளத்தில் மிதக்கும் தூத்துக்குடி: குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது, சாலைகள் துண்டிப்பு appeared first on Dinakaran.