ஊரப்பாக்கம் ஊராட்சியில் மழைநீர் தேங்குவதால் பொதுமக்கள் அவதி

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊரப்பாக்கம் ஊராட்சியில், ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், ஐயஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஊரப்பாக்கம் ஊராட்சியில் சாலை மற்றும் கால்வாய் வசதி இல்லாததால் மழைநீர் தேங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, பலமுறை புகார் கூறியும் ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாததால் கலெக்டர் நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஊராட்சிக்குட்பட்ட 13வது வார்டில் உள்ள யமுனை நகர், கோதாவரி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 1500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள பிரதான சாலை மற்றும் தெரு சாலைகள் கடந்த 6 மாதங்களாக குண்டும்குழியுமாக காட்சியளித்து வருகிறது. இப்பகுதியில், சாலை மற்றும் கால்வாய் வசதி இல்லாததால் மழைநீர் செல்ல வழி இல்லாமல் சாலையிலேயே தேங்குகிறது. மேலும், சாலையோரம் எங்கு பார்த்தாலும் குப்பைகாடாக காட்சி அளிக்கிறது. இதனால், கடும் துர்நாற்றம் வீசுவது மட்டுமல்லாமல், கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி மக்களை வாட்டி வதைக்கிறது. தற்போது, வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அதிகனமழை பெய்யும்போது குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கும் அவல நிலை உள்ளது.

எனவே, இதுகுறித்து கலெக்டர் தலையிட்டு போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். மேலும், ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் சாலை, கால்வாய், தெரு விளக்கு, குடிநீர், குப்பை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஊராட்சி செயலர் பாளையம் என்ற கருணாகரனிடம் புகார் கூறியும் கண்டு கொள்வதில்லை. எனவே அவரை இடமாற்றம் செய்ய கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

The post ஊரப்பாக்கம் ஊராட்சியில் மழைநீர் தேங்குவதால் பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: