2,668 அடி உயர மலைக்கு தீபக்கொப்பரை கொண்டு செல்லப்பட்டது திருவண்ணாமலையில் இன்று மகாதீபம்: கொட்டும் மழையிலும் குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற மகாதீப பெருவிழா இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. அதையொட்டி, இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்படுகிறது. கொட்டும் மழையிலும் மகாதீபத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான வெள்ளித் தேரோட்டம் கடந்த 9ம் தேதியும், மகா தேரோட்டம் கடந்த 10ம் தேதியும் நடந்து முடிந்தது. தீபத்திருவிழா உற்சவத்தின் 10ம் நாளான இன்று மகாதீப பெருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது.

இதையொட்டி மகா தீபம் ஏற்றுவதற்கான தீபகொப்பரையையும் நேற்று பலத்த பாதுகாப்புடன் மலை உச்சிக்கு கொண்டு சேர்க்கப்பட்டது. அண்ணாமலையார் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்திருந்த தீபக்கொப்பரைக்கு அதிகாலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருப்பணி ஊழியர்கள் தோளில் சுமந்தபடி கனமழையையும் பொருட்படுத்தாமல் மலை உச்சிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். காலை 6.30 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பட்ட கொப்பரை, பகல் 12.50 மணிக்கு மலை உச்சிக்கு சென்றடைந்தது. பின்னர், மலை மீது சிறப்பு பூஜைகளுடன் தீப கொப்பரை நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

மகாதீப கொப்பரை ஐந்தரை அடி உயரமும், சுமார் 200 கிலோ எடையும் கொண்டதாகும். பாதுகாப்புக்காக போலீசார், வனத்துறையினர், மருத்துவ குழுவினரும் சென்றனர். மகாதீப பெருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோயில் கருவறை முன்பு இன்று அதிகாலை 4 மணிக்கு, ‘ஏகன் அநேகன்’ எனும் தத்துவத்தை உணர்த்தும் வகையில் பரணி தீபம் ஏற்றப்படும். அதையொட்டி, கோயிலுக்குள் பக்தர்களை அதிகாலை 2 மணி முதல் அனுமதிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, இன்று மாலை மகாதீப பெருவிழா நடைபெற உள்ளது.

அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் உள்ள தீப தரிசன மண்டபத்தில் மாலை 5 மணியளவில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளல் நடைபெறும். மாலை 5.58 மணிக்கு, கோயில் கொடிமரம் முன்பு ஆனந்த தாண்டவத்துடன் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி காட்சியளிப்பார். அப்போது, கொடிமரம் முன்பு அகண்ட தீபம் ஏற்றியதும், மிகச்சரியாக மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் அண்ணாமலையாரின் ஜோதி வடிவமான ‘மகா தீபம்’ ஏற்றப்படும். தீபம் ஏற்றுவதற்காக 4,500 கிலோ தூய நெய், 1,500 மீட்டர் திரி, 20 கிலோ கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது. தீபம் ஏற்றுவற்கான நெய், திரி, கற்பூரம் ஆகியவை இன்று அதிகாலை மலைக்கு கொண்டு செல்லப்படும்.

நேற்று அதிகாலை தொடங்கி தொடர்ந்து மழை நீடித்த போதும், வழக்கமான உற்சாகத்துடன் விழா நடந்து வருகிறது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர். சமீபத்தில் தீபமலையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக, மலையேற பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் மலை மீது அனுமதியின்றி பக்தர்கள் ஏறுவதை தடுக்க கூடுதல் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மகா தீபத்தை முன்னிட்டு, கோயில் கோபுரம் மற்றும் கோயில் வளாகம் மின்விளக்குகளால் ஜொலிப்பதால் திருவண்ணாமலை நகரம் விழாக்கோலமாக காட்சியளிக்கிறது.

* கோயிலுக்குள் 11,500 பக்தர்கள் அனுமதி
அண்ணாமலையார் கோயிலில் இன்று நடைபெறும் மகாதீப விழாவை தரிசிக்க, இன்று மதியம் 2 மணியில் இருந்து கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கட்டளைதாரர், உபயதாரர் அனுமதிச் சீட்டு மற்றும் ஆன்லைன் கட்டண தரிசன டிக்கெட் பெற்றிருப்போர் மட்டும் அதிகபட்சமாக 11,500 பக்தர்களை அனுமதிக்க திட்டமிட்டுள்ளனர்.

* 4100 சிறப்பு பஸ்கள், 22 ரயில்கள் இயக்கம்
தீபத்தை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக, 4,100 சிறப்பு பஸ்கள் நேற்று முதல் இயக்கப்படுகிறது. அதேபோல், தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள கால அட்டவணைப்படி 22 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. திருவண்ணாமலை நகரை இணைக்கும் பிரதான சாலைகளில் 25 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கார், வேன் போன்றவை நிறுத்த 120 இடங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவசரகால மீட்பு பணிக்காக ஆம்புலன்ஸ், மொபைல் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. கோயில் மற்றும் கிரிவலப்பாதையில் சிறப்பு மருத்துவ முகாம்கள், முதலுதவி மையங்கள், நடமாடும் மருத்துவ குழுக்கள், காவல் உதவி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* பாதுகாப்பு பணியில் 1,400 போலீஸ்
திருவண்ணாமலை தீபத்திருவிழாவை முன்னிட்டு, கூடுதல் டிஜிபி (சட்டம் ஒழுங்கு) டேவிட்சன் ஆசிர்வாதம், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் ஆகியோர் தலைமையில், 7 டிஐஜிக்கள், 32 எஸ்பிக்கள் உள்பட 14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மலையேறும் பக்தர்களின் பாதுகாப்புக்காக 120 சிறப்பு அதிரடிப்படை வீரர்கள்(எஸ்டிஎப்) பணியில் உள்ளனர். காணாமல் போகும் குழந்தைகளை கண்டறிய வசதியாக செல்போன் எண்ணுடன் கூடிய `ரிஸ்ட் பேண்ட்’ குழந்தைகளின் கைகளில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலில் திருட்டு, செயின் பறிப்பு போன்றவற்றில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்காணிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் நடமாட்டத்தை கண்காணிக்க ‘பேஸ் டிராக்கிங்’ எனும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* தயார் நிலையில் பேரிடர் மீட்புக்குழு
தீபம் ஏற்றும் மலையில், கடந்த 1ம் தேதி மாலை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து மண்சரிவு அபாயம் உள்ளதால் மலையேற பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் நேற்று அதிகாலை முதல் மீண்டும் கனமழை பெய்து வருவதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பணிகளை மாவட்ட நிர்வாகம் அதிகரித்திருக்கிறது. அதன்படி, தேசிய பேரிடர் மீட்புக்குழுவை மீண்டும் அனுப்பி வைக்குமாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கோரிக்கை வைத்தார். அதன் அடிப்படையில், அரக்கோணத்தில் இருந்து 33 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் திருவண்ணாமலைக்கு நேற்று இரவு வந்தனர். தீபத்திருவிழா மற்றும் பவுர்ணமி கிரிவலம் நிறைவடையும் வரை (15ம் தேதி) திருவண்ணாமலையில் முகாமிட திட்டமிட்டுள்ளனர். தீபமலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் இடத்தில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் பாதுாப்பு பணிக்காக செல்ல உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். மேலும், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினருடன், மாநில பேரிடர் மீட்புக்குழுவினரும் பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.

The post 2,668 அடி உயர மலைக்கு தீபக்கொப்பரை கொண்டு செல்லப்பட்டது திருவண்ணாமலையில் இன்று மகாதீபம்: கொட்டும் மழையிலும் குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள் appeared first on Dinakaran.

Related Stories: