பல கோடி சொத்து தகராறு; நடிகர் மோகன்பாபு, மகன் போலீசில் தனித்தனி புகார்

திருமலை: தெலுங்கு நடிகர் மோகன்பாபு மற்றும் அவரது மூத்த மகன் இடையே சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக இருவரும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் தனித்தனியாக புகார் கொடுத்துள்ளனர். தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்த மூத்த நடிகர் மோகன்பாபு. இவருக்கு பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளதாம். இந்நிலையில் மோகன்பாபுவுக்கும், அவரது மகன் மனோஜுக்கும் இடையே கடந்த ஓராண்டாக சொத்து தகராறு இருந்து வருவதாக தெரிகிறது. மோகன்பாபுவிடம், மகன் மனோஜ் தனது பங்கை பலமுறை கேட்டுள்ளார். மேலும் சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்ைதயில், மனோஜின் கோரிக்கையை மோகன்பாபு ஏற்கவில்லையாம். மோகன்பாபு, மனோஜ் சண்டையை சமரசம் செய்ய, மோகன்பாபுவின் மகளும் நடிகையுமான மஞ்சுலட்சுமி கடந்த சில தினங்களுக்கு முன் மும்பையில் இருந்து ஐதராபாத் வந்தார்.

அவர் தந்தை மோகன்பாபு, சகோதரர் மனோஜ் இடையே சமரசம் செய்ய முயன்றார். மேலும் மனோஜ் போலீசில் புகார் அளிக்க உள்ளதை அறிந்த மஞ்சுலட்சுமி, சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால் பேச்சுவார்த்தையில் மனோஜ் திருப்தி அடையவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் மஞ்சு லட்சுமி மும்பைக்கு சென்றுவிட்டார். இந்த சம்பவங்களால் மோகன்பாபு வசிக்கும் ஐதராபாத் ஜல்பள்ளி வீட்டிலும், மூத்த மகன் மனோஜ் வீட்டிலும், இளைய மகன் மஞ்சு விஷ்ணு வீட்டில் என 3 பேரின் வீடுகளிலும் ஆண் பவுன்சர்கள், பெண் பவுன்சர்கள் நேற்று நிறுத்தப்பட்டனர். இந்நிலையில் நடிகர் மோகன்பாபு, தனது மகன் மஞ்சு மனோஜ் மீது போலீசில் நேற்றிரவு ராச்சகொண்டா போலீஸ் கமிஷனருக்கு புகார் மனு அனுப்பினார். அதில் மகன் மனோஜ் எனது வீட்டை அபகரிக்க முயல்கிறார். அவர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து என்னை வீட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டுகிறார்.

எனவே மனோஜிடம் இருந்து எனக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும். என் வீட்டிற்கு நான் தயக்கமின்றி செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார். முன்னதாக மஞ்சு மனோஜ், தனது ஆதரவாளர்களுடன் 6 வாகனங்களில் சென்று பஹ்டி ஷெரீப் போலீசில் தந்தை மோகன்பாபு மீது புகார் அளித்தார். அதில் மோகன்பாபு மற்றும் அவரது ஆதரவாளர்கள் என்னை தாக்கினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். புகாரின்போது தன்னை தாக்கியதால் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான அறிக்கையை போலீசாரிடம் வழங்கினார். அந்த மருத்துவ அறிக்கையின்படி போலீசார் நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்துள்ளார். தந்தை, மகன் இடையே நடந்த சொத்து தொடர்பான புகார்களின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பல கோடி சொத்து தகராறு; நடிகர் மோகன்பாபு, மகன் போலீசில் தனித்தனி புகார் appeared first on Dinakaran.

Related Stories: