விழுப்புரம் : தமிழக அரசு அறிவித்த ரூ.2,000 நிவாரண தொகை, அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் அனைவருக்கும் வழங்கப்படும் என்று சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிவாரணத்தொகை, அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்டவைகள் வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாட்களுக்கு மழைநீர் தேங்கி பாதிக்கப்பட்ட வீடுகள் கணக்கெடுப்பு நடத்தி நிவாரண தொகை, பொருட்கள் வழங்க ேடாக்கன் விநியோகிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.
விழுப்புரம் நகரில் மொத்தமுள்ள 42 வார்டுகளில் குறிப்பிட்ட சில வார்டுகளில் மழைநீர் பாதிப்பு ஏற்படாததால் அந்த பகுதிகளுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. இதனிடையே 9வது வார்டில் நிவாரணம் வழங்காததை கண்டித்து நேற்று அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்த வார்டு அதிமுக கவுன்சிலர் ராதிகா செந்தில் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் காட்பாடி ரயில்வே மேம்பாலத்தின் அருகில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த நகர காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் வர வேண்டுமென்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தாசில்தார் கனிமொழி அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் எங்கள் பகுதிகளில் கனமழையால் கழிவுநீருடன், மழைநீர் சேர்ந்து வீடுகள் பாதிக்கப்பட்டன.
வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் எங்கள் குடியிருப்புகளை மட்டும் கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தனர். இதனை கேட்டறிந்த தாசில்தார் கனிமொழி, இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அனைவருக்கும் நிவாரணம் கிடைக்கும். இன்னும் ஓரிரு நாட்களில் டோக்கன் விநியோகம் செய்து பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவித்த பிறகு கலைந்து சென்றனர். இதனால் சென்னை சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல், செஞ்சி அடுத்த மேல்மலையனூர் தாலுகாவை சேர்ந்த சொக்கனந்தல், தென்பாலை கிராம மக்கள் செஞ்சி-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் செஞ்சி டிஎஸ்பி கார்த்திகா பிரியா, தாசில்தார் ஏழுமலை, சத்தியமங்கலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் மறியலை கைவிட மறுத்தனர். இதனால் அப்பகுதி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யன் ஷூ நிகம் சம்பவ இடத்துக்கு சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. வல்லம் ஒன்றியம் சேர்விளாகம் கிராமத்திலும் மறியல் போராட்டம் நடந்தது. செஞ்சி தாசில்தார் ஏழுமலை பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
செஞ்சி வேளாண்மை கூட்டுறவு சங்கம் எதிரிலும் சிறிது நேரம் மறியல் போராட்டம் நடத்தப்பட்டு கைவிடப்பட்டது. இதேபோல் மேல்மலையனூர் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் மேல்மலையனூர்-வளத்தி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
வட்டாட்சியர் பேச்சுவார்த்தைக்கு பிறகு மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. வானூர் தாலுகா திருவக்கரை அருகே உள்ள எறையூர் கிராமத்தில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் வானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராஜன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
The post விழுப்புரத்தில் வெள்ளத்தால் பாதிப்பு அரசு அறிவித்த நிவாரணம் அனைவருக்கும் கிடைக்கும் appeared first on Dinakaran.