மதுரை, டிச. 10: மதுரையில் போக்குவரத்து விதி மீறல்கள், விபத்துகள், விபத்தால் உயிரிழப்புகள், குற்ற செயல்கள் மற்றும் வாகன நெரிசல்களை குறைக்க போக்குவரத்து போலீசார் ஏஎன்பிஆர் எனப்படும் அதிநவீன காமிராக்களை பயன்படுத்த திட்டமிட்டு உள்ளனர். இந்த காமிராக்கள் விதிகளை மீறும் வாகனங்களின் பதிவு எண்ணை ‘க்ளிக்’ என பதிவு செய்யும்.
இந்த பதிவினை அடிப்படையாக கொண்டு காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி, சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும். மதுரையில் விபத்துக்களைத் தவிர்க்கவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இங்குள்ள 34 சிக்னல்களும் வினாடிகள் கவுண்டவுன் மூலம் இயக்கப்படுகிறது. சமீபமாக, ரிமோட் கன்ட்ரோல் மூலம் சிக்னல்கள் இயக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்படுகிறது. இது குறித்து போக்குவரத்து துணை கமிஷனர் வனிதா கூறுகையில், ‘‘சென்னை, கோவையை போல மதுரையிலும் ஏஎன்பிஆர் காமிராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால், இந்த வகை காமிராக்களை நீண்ட சாலைகளில் உள்ள சிக்னல்களில் மட்டுமே பொருத்த முடியும். அத்துடன் ஒரு காமிராவின் விலை ரூ.9 லட்சம். இந்த அதி நவீன காமிராக்களை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் எம்ஜிஆர் சிலையில் துவங்கி மாட்டுத்தாவணி மெயின் ரோட்டிலும், சிம்மக்கல் அல்லது காளவாசல் பகுதியிலும் விரைவில் இந்த நவீன காமிராக்கள் பொருத்தப்பட இருக்கிறது. இந்த நடைமுறை பயன்பாட்டுக்கு வந்தால் விபத்துக்களின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைய வாய்ப்புள்ளது’’ என்றார்.
The post மதுரை சாலைகளில் விதிமீறினால் ‘க்ளிக்’ வாகனங்களுக்கு அபராதம் விதிக்க நவீன காமிராக்கள் போக்குவரத்து துணை கமிஷனர் தகவல் appeared first on Dinakaran.