சென்னை பல்கலை நூற்றாண்டு விழா அரங்கம் வரும் ஜனவரி மாதம் புதுப்பிக்கும் பணி தொடக்கம்: பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள புகழ்பெற்ற நூற்றாண்டு விழா அரங்கம் பல ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்படவுள்ளது. பல முக்கிய அரசு விழாக்கள் மற்றும் பதவியேற்பு விழாக்கள் நடக்கும் முக்கியமான இடமாக சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு அரங்கம் உள்ளது. பொதுப்பணித் துறையின் கட்டிட மையம் மற்றும் பாதுகாப்புப் பிரிவு, வரலாற்றுக் கட்டமைப்புகளை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, வருகிற ஜனவரி மாதம் அரங்கத்தை சீரமைக்கும் பணியைத் தொடங்க உள்ளது.

1965ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அரங்கம் இரண்டு தளங்களையும் கிழக்கு நோக்கிய பால்கனியையும் கொண்டுள்ளது. 81,453 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த அரங்கத்தை அப்போதைய மெட்ராஸ் கவர்னராக இருந்த சர் ஜெய சாமராஜ உடையார் பகதூர் திறந்து வைத்துள்ளார். சிறப்பான முகப்புடன், 17.50 மீட்டர் உயரமான அமைப்பு கருத்தரங்குகள், கண்காட்சிகள் மற்றும் மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கு மிகவும் விரும்பப்படும் இடமாக இந்த அரங்கம் உள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கட்டிடம் ரூ.26.32 கோடி செலவில் புதுப்பிக்கப்பட உள்ளது. ஸ்டீல் டிரஸ் கூரை கொண்ட இந்த கட்டிடம் முன்பு பராமரிப்பு மட்டுமே செய்யப்பட்டது. தற்போது கசிவு ஏற்பட்டுள்ள மேற்கூரையை சீரமைத்தல், கட்டிடத்தின் உள்கட்டமைப்பை பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மின்மேம்படுத்தல் தவிர, ஒலியியல் மற்றும் இருக்கை ஏற்பாடுகளும் செய்யப்படும். கல் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது, மேலும் மேடை தரையையும் மீண்டும் புதுப்பிக்க வேண்டியுள்ளது. ஒரு வருடத்தில் இந்தப் பணிகள் நிறைவடையும். இவ்வாறு தெரிவித்தார்.

The post சென்னை பல்கலை நூற்றாண்டு விழா அரங்கம் வரும் ஜனவரி மாதம் புதுப்பிக்கும் பணி தொடக்கம்: பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: