திருவாரூர், டிச. 6: திருவாரூர் மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சர்வதேச தர சான்றிதழ் பெறுவதற்கு செலுத்திய கட்டணத் தொகையில் மானியம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சர்வதேச போட்டித்தன்மையினை மேம்படுத்தவும் உலகளாவிய சந்தையுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கும் ஏதுவாக இந்நிறுவனங்கள் சர்வதேச தரச்சான்றிதழ்கள் பெற செலுத்தும் கட்டணத் தொகையில் ஒவ்வொரு சான்றிதழுக்கும் 100 விழுக்காடு வரை ஈடு செய்யும் திட்டத்தினை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் பெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடையவையாகும். மேலும் இந்நிறுவனங்கள் சான்றிதழ் அமைப்புகளுக்கான தேசிய அங்கீகார வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் மூலமாக சர்வதேச தரச்சான்று பெற்றிருத்தல் அவசியம். தற்போது, குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள் தங்களது ஏற்றுமதியினை அதிகரிக்கும் நோக்கத்தில் ஏற்கனவே தரச்சான்றிதழ் மானியம் பெறாத உற்பத்தி நிறுவனங்கள் தங்களது சர்வதேச தரச்சான்றிதழ்களை முதன் முறையாக புதுப்பிக்க செலுத்தும் கட்டணத்தில் 25 விழுக்காடு அதிகபட்சமாக ரூ.ஒரு லட்சம் வரை தமிழக அரசினால் மானியமாக வழங்கப்படும். மேலும் விபரங்கள் பெற மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை அணுகிடலாம். இந்த அரிய வாய்ப்பினை திருவாரூர் மாவட்டத்திலுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.
The post சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு appeared first on Dinakaran.