சியோல்: வடகொரியா தென்கொரியா நாடுகளின் நீண்டநாள் மோதலால் கொரிய தீபகற்பத்தில் எப்போதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.தென்கொரியாவுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் இணைந்து கூட்டு ராணுவ போர் பயிற்சிகளை நடத்துவது, தென்கொரியாவில் அமெரிக்காவின் குண்டு வீசும் விமானங்கள், அணுஆயுத நீர்மூழ்கி கப்பல் போன்ற சக்தி வாய்ந்த ராணுவ தளவாடங்கள் நிறுத்தி வைப்பு போன்ற நடவடிக்கைகள் வடகொரியாவை எரிச்சலடைய வைத்துள்ளது. இதனால் வடகொரியா குறுகிய தூர ஏவுகணை சோதனை, கண்டம் விட்டு கண்டம் தாவும் நீண்டதூர ஏவுகணை சோதனை, நீருக்கடியில் கதிரியக்க சுனாமிகளை உருவாக்கி அணு ஆயுத இலக்குகளை அழிக்கும் புதிய டிரோன் சோதனைகளை செய்து வருகிறது. வடகொரியாவின் செயல்களால் அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே பனிப்போர் சூழல் நிலவுகிறது.
மேலும் தென்கொரியாவில் அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்பட உள்ள நிதிநிலை அறிக்கை தொடர்பாக அதிபர் யூன் சுக் இயோல் தலைமையிலான ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும், அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியை சேர்ந்த பல எம்பிக்கள் எதிர்க்கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் திடீரென்று நேற்று முன்தினம் தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல், “எதிர்க்கட்சியினர் வடகொரியாவுடன் சேர்ந்து கொண்டு தென்கொரிய அரசை முடக்க முயற்சிக்கின்றனர்” என்று குற்றச்சாட்டை முன்வைத்தார். தொடர்ந்து தொலைக்காட்சியில் மக்களிையே உரையாற்றிய யூன் சுக் இயோல், “எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தை கட்டுப்படுத்துகின்றனர். வடகொரியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருகின்றனர். நாட்டில் அரசுக்கு எதிரான சக்திகளை ஒழிப்பதற்காக அவசரநிலை பிரகடனம் செய்யப்படுகிறது” என அறிவித்தார்.
அதிபரின் இந்த திடீர் அறிவிப்பு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிபரின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வாயில்முன் குவிந்த மக்கள் அதிபருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். உடனே அங்கு குவிக்கப்பட்ட ராணுவ வீரர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற பொதுமக்களை தாக்கினர். இதனால் மக்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆனால் அவசர நிலையை அறிவித்த சில மணி நேரங்களிலேயே அதை வாபஸ் பெற்று விட்டதாக அதிபர் யூன் சுக் இயோல் அறிவித்தார். இந்நிலையில் தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோலை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அந்நாட்டு ஜனநாயக கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீது நாளை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
The post எதிர்க்கட்சிகள் நெருக்கடியால் அதிபர் அறிவிப்பு; தென்கொரியாவில் அவசரநிலை பிரகடனம்: எதிர்த்து போராட்டம் வெடித்ததால் சில மணி நேரங்களில் வாபஸ் appeared first on Dinakaran.