11 ஆண்டுகளுக்கு பிறகு தெற்கு ரயில்வே அங்கீகார தேர்தல்: இன்று தொடங்கி 3 நாட்களுக்கு நடைபெறும்!!

சென்னை: 11 ஆண்டுகளுக்கு பிறகு தெற்கு ரயில்வே அங்கீகார தேர்தல் சென்னையில் இன்று தொடங்கி 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. ரயில்வேயில் முதல்முறையாக 2007ம் ஆண்டு தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெற்றது. அங்கீகாரம் பெறும் தொழிற்சங்கங்கள் மட்டுமே ரயில்வே நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியும். 2013ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யு.) 43% வாக்குகளை பெற்று அங்கீகார தொழிற்சங்கமாக தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதையடுத்து 10 ஆண்டுகளுக்கு பிறகு ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் வரும் டிச.4, 5, 6ம் தேதிகளில் நடைபெறும் என ரயில்வே வாரியம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அறிவித்தது.

ரயில்வேயின் 17 மண்டலங்களில் பணியாற்றும், 12.20 லட்சம் ஊழியர்களின் ஆதரவைப் பெற ரயில்வே தொழிற்சங்கங்களின் சம்மேளனங்கள் தயாராகி வருகின்றன. தெற்கு ரயில்வேயில், அங்கீகாரத் தேர்தலில் போட்டியிடும் ரயில்வே தொழிங்சங்கங்களின் இறுதிப்பட்டியலை தெற்கு ரயில்வே கடந்த மாதம் வெளியிட்டது. தெற்கு ரயில்வேயில் அங்கீகாரத்தில் இருக்கும் எஸ்ஆர்எம்யு, காங்கிரஸ் கட்சியின் எஸ்ஆர்இஎஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-யின் டிஆர்இயு, பாஜகவின் டிஆர்கேஎஸ் உள்ளிட்ட 6 சங்கங்கள் களத்தில் உள்ளன.

11 ஆண்டுகளுக்கு பிறகு அங்கீகாரத் தேர்தல் நடைபெறவுள்ளதால், தொழிற்சங்கங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. சுமார் 76 ஆயிரம் தொழிலாளர்கள் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் எஸ்.ஆர்.எம்.யு. எனப்படும் தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன், டி.ஆர்.இ.யு., எனப்படும் தட்ஷிண ரயில்வே தொழிலாளர் சங்கம், எஸ்.ஆர்.இ.எஸ், எனப்படும் தெற்கு ரயில்வே தொழிலாளர் சங்கம் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் பாஜக தொழிற் சங்கம் முதன்முறையாக களமிறங்குகிறது. இச்சங்கங்களை சேர்ந்தவர்கள் பல்வேறு இடங்களில் ரயில்வே ஊழியர்களிடம் வாக்கு சேகரித்து வந்தனர்.

இந்நிலையில், ரயில்வே அங்கீகாரத் தேர்தல் இன்று தொடங்கியுள்ளது. அடுத்த 3 நாட்கள் நடைபெறும். 3வது நாளில் ரயில் ஓட்டுநர், கார்டுகள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 38 வாக்குசாவடிகள் உள்பட தெற்கு ரயில்வேயில் 140 வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சுமார் 76 ஆயிரம் தொழிலாளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்கு எண்ணி்க்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு டிச.12ம் தேதி நடைபெறவுள்ளது. மொத்த வாக்காளர்களில் 30% வாக்குகளை பெறும் சங்கத்துக்கு ரயில்வே அங்கீகாரம் கிடைக்கும். இந்த சங்கம், ரயில்வே தொழிலாளர்களின் பிரச்னை தொடர்பாக நிர்வாகத்துடன் நேரடியாக பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியும். 15% வாக்குகள் பெறும் சங்கத்துக்கு கூட்டம் நடத்தவும் , செய்தி பலகை வைக்கவும் அனுமதி கிடைக்கும்.

The post 11 ஆண்டுகளுக்கு பிறகு தெற்கு ரயில்வே அங்கீகார தேர்தல்: இன்று தொடங்கி 3 நாட்களுக்கு நடைபெறும்!! appeared first on Dinakaran.

Related Stories: