தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாயம் இருப்பதால் ₹65 லட்சம் வீணாகும் அவலம்: ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனையிலேயே பிரேத பரிசோதனை அறை கட்டப்படுமா?

ஸ்ரீவைகுண்டம், டிச. 3: தாமிரபரணி ஆற்றில் ஒவ்வொரு ஆண்டும் வெள்ள அபாயம் இருப்பதால் பிரேத பரிசோதனை அறை சேதமடையும் சூழல் உள்ளது. எனவே வைகுண்டம் அரசு மருத்துவமனை வளாகத்திலேயே புதிதாக பிரேத பரிசோதனை அறையை கட்ட வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீவைகுண்டத்தில் செயல்படும் அரசு மருத்துவமனை, சுற்றுவட்டாரத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உயிர்க்காக்கும் மையமாக செயல்பட்டு வருகிறது. அவசர சிகிச்சை, மகப்பேறு உள்ளிட்டவைகளுக்கு உயர்தர சிகிச்சைகளால் ஏழை எளிய கிராமப்புற மக்கள் பெரிதும் பயன்பட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக மருத்துவமனையில் காலிப் பணியிடங்கள் அதிகரித்ததால் உயர் சிகிச்சைகளுக்காக ெநல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் வைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு உட்பட்ட பிரேத பரிசோதனை அறை தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் இருந்தது. இப்பகுதியில் தான் வைகுண்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டு பகுதிகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வரும் நிலையில் ஆண்டுதோறும் மழை வெள்ள காலங்களில் பிரேத பரிசோதனை அறைக்குள் தண்ணீர் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வந்தது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையின் போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் முற்றிலுமாக பிரேத பரிசோதனை சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இப்பகுதியில் நடக்கும் கொலைகள், தற்கொலைகள், விபத்துக்கள் உள்ளிட்ட மரணங்களுக்கு பிரேத பரிசோதனை செய்ய நெல்லை அரசு மருத்துவமனைக்கு கடந்த ஓராண்டாக அனுப்பி வைத்து வருகின்றனர்.

இதனால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் பிரேத பரிசோதனை அறையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். வைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ், தமிழக அரசுக்கு அளித்த கோரிக்கை மனுவின் அடிப்படையில் வைகுண்டம் பிரேத பரிசோதனை அறையை சீரமைக்க ₹65 லட்சம் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் ஆண்டுதோறும் தாமிரபரணி ஆற்றில் மழை வெள்ள பாதிப்புகள் தொடரும் நிலையில் தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் பிரேத பரிசோதனை அறையை மீண்டும் கட்டக்கூடாது. அதனை வைகுண்டம் அரசு மருத்துவமனை வளாகத்திலேயே புதிதாக கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வைகுண்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் கூறுகையில், ‘தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் செயல்பட்டு வந்த பிரேத பரிசோதனை அறை கடந்தாண்டு டிசம்பரில் பெய்த மழை வெள்ளத்தால் சேதமடைந்தது. இந்த அறையை சீரமைக்க அரசு ₹65 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் ஒவ்வொரு ஆண்டும் மழை வெள்ள அபாயம் உள்ளதால் பிரேத பரிசோதனை அறையை அரசு மருத்துவமனை வளாகத்திலேயே புதிதாக கட்ட வேண்டும். மருத்துவமனையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்’ என்றார்.

The post தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாயம் இருப்பதால் ₹65 லட்சம் வீணாகும் அவலம்: ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனையிலேயே பிரேத பரிசோதனை அறை கட்டப்படுமா? appeared first on Dinakaran.

Related Stories: