சுருட்டப்பள்ளி, தேவந்தவாக்கத்தில் சிவன் கோயில்களில் பிரதோஷ விழா

ஊத்துக்கோட்டை: சுருட்டபள்ளி, தேவந்தவாக்கத்தில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ விழா நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஊத்துக்கோட்டை அருகே, ஆந்திர மாநிலத்தில் உள்ள சுருட்டப்பள்ளி கிராமத்தில் புகழ் பெற்ற ஸ்ரீ பள்ளி கொண்டேஸ்வரர் கோயில் உள்ளது.

இங்கு, கார்த்திகை மாத வியாழக்கிழமை தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று காலையிலேயே விநாயகர், வால்மீகீஸ்வரர், மரகதாம்பிகா, தம்பதி சமேத தட்சினாமூர்த்தி, முருகன், வள்ளி, தெய்வானை, பள்ளி கொண்டேஸ்வரர், சர்வ மங்களா ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. ஸ்ரீ பள்ளி கொண்டேஸ்வரருக்கு வெள்ளி கவசம் அணிவித்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.

பின்னர், மாலையில் வால்மீகிஸ்வரர் எதிரே உள்ள நந்திக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்து, அருகம்புல், வில்வ இலை மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

பின்னர், சிவன் பார்வதி ஊர்வலமாக கோயிலை வலம் வந்தனர். இப்பூஜைகளை தலைமை குருக்கள் கார்த்திகேசன் சிவாச்சாரியார் செய்தார். இப்பிரதோஷத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதேபோல், தேவந்தவாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ தேவபுரீஸ்வரர் கோயில், பெரியபாளையம் ஐமுக்தீஸ்வரர் கோயில், வடதில்லை சிவன் கோயில் ஆகிய கோயில்களில் பிரதோஷ விழா நடைபெற்றது.

 

The post சுருட்டப்பள்ளி, தேவந்தவாக்கத்தில் சிவன் கோயில்களில் பிரதோஷ விழா appeared first on Dinakaran.

Related Stories: