ராஜஸ்தானின் அஜ்மீரில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில், இந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், ‘‘அஜ்மீர் தர்கா இருக்கும் இடத்தில் சிவன் கோயில் இருந்ததாக கல்வியாளர் ஹர் பிலாஸ் சர்தா எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்லாமிய படையெடுப்பாளர்களால் சிவன் கோயில் அழிக்கப்பட்டு, அங்கு தர்கா கட்டப்பட்டதாகவும், சிவன் சிலை தர்காவின் அடித்தளத்திற்கு மாற்றப்பட்ட பிறகு பல ஆண்டுகள் பூஜை நடத்தப்பட்டதாகவும் பிலாஸ் சர்தா தனது 2 ஆண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு புத்தகத்தில் எழுதி உள்ளார். எனவே, தொல்லியல் துறை ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும். அதன் அறிக்கையை அடிப்படையாக கொண்டு அஜ்மீர் தர்காவை சங்கத் மோசன் மகாதேவ் கோயிலாக அறிவிக்க வேண்டும். தர்கா என எந்த பதிவு இருந்தாலும் அதை ரத்து செய்ய வேண்டும். கோயிலில் வழிபாடு தொடங்கவும் உத்தரவிட வேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், இதுதொடர்பாக ஒன்றிய சிறுபான்மை விவகார அமைச்சகம், தொல்லியல் துறை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி, விசாரணையை அடுத்த மாதம் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்தியாவில் இஸ்லாமிய போதனைகளை பரப்பிய சூபி ஞானி கவாஜா முகைதீன் சிஷ்டியின் கல்லறையான ராஜஸ்தானின் அஜ்மீர் ஷெரீப் தர்கா, பழமையான புனித யாத்திரை தலமாக உலகெங்கிலும் புகழ் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் உருஸ் திருவிழாவின் போது நாட்டின் பிரதமர் அஜ்மீர் தர்காவுக்கு புனித போர்வை (சதர்) அனுப்பி வைப்பது வழக்கம்.
நேரு காலத்தில் தொடங்கப்பட்ட இப்பாரம்பரியத்தை பிரதமர் மோடியும் ஒவ்வொரு ஆண்டும் பின்பற்றி வருகிறார். இப்படிப்பட்ட தர்கா, சிவன் கோயில் மீது கட்டப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கால் நேற்று பெரும் விவாதம் தொடங்கி உள்ளது. மேலும், சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தின் சம்பலில் உள்ள மசூதியை ஆய்வு செய்ய உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நடந்த சில நாட்களில், அஜ்மீர் தர்கா குறித்த வழக்கு விசாரணைக்கு வந்திருப்பது மற்றொரு அசம்பாவிதத்திற்கு வழிவகுக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
* நேருவால் நடந்த தவறு
ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறுகையில், ‘‘அஜ்மீரில் சர்வே செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டால் என்ன பிரச்னை? முகலாயர்கள் இந்தியாவுக்கு வந்தபோது கோயில்களை இடித்துத் தள்ளினார்கள் என்பது உண்மை. காங்கிரஸ் அரசு இதுவரை சமாதானம்தான் செய்தது. 1947ம் ஆண்டிலேயே இதை நேரு தடுத்திருந்தால் இன்று நீதிமன்றத்தை அணுக வேண்டிய அவசியமே இருந்திருக்காது’’ என்றார்.
* பாஜ, ஆர்எஸ்எஸ் தொடர்புள்ளவர்கள்
ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி அளித்த பேட்டியில், ‘‘அஜ்மீர் தர்கா ஷெரீப் 800 ஆண்டுகளாக உள்ளது. நாட்டின் ஒவ்வொரு பிரதமரும் ‘உருஸ்’ நேரத்தில் தர்காவிற்கு ‘சதர்’ அனுப்புகிறார்கள். இப்போது திடீரென்று பிரச்னை எழுப்புகிறார்கள். இதெல்லாம் எங்கே போய் நிற்கும்? வழிபாட்டு தலங்கள் சட்டம் 1991க்கு என்ன மதிப்பிருக்கிறது? பிரதமர் மோடி இப்போது என்ன சொல்வார்? அவர் சதர் அனுப்பிய தர்கா இல்லை என்பாரா? நாட்டை சீர்குலைப்பதற்காக இப்படி செய்கிறார்கள். இந்த விஷயங்கள் நாட்டுக்கு நல்லதில்லை என்று திரும்பத் திரும்ப சொல்கிறேன். இவர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாஜ, ஆர்எஸ்எஸ் உடன் தொடர்புடையவர்கள். இதை யாரும் மறுக்க முடியாது’’ என்றார்.
* நாடு எங்கே போகிறது?
மார்க்சிஸ்ட் கட்சி விடுத்த அறிக்கையில், ‘இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததில்லை. இது வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 1991ன் விதிகளுக்கு எதிரானது. ஏற்கனவே சம்பல் மசூதி விவகாரத்தில் இந்த சட்டம் மீறப்பட்டுள்ளது. எனவே உச்ச நீதிமன்றம் உடனடியாக தலையிட வேண்டும்’ என வலியுறுத்தி உள்ளது. மக்கள் மாநாட்டு கட்சி தலைவர் மெகபூபா முப்தி கூறுகையில், ‘‘உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிக்கு (டி.ஒய்.சந்திரசூட்) நன்றி. சிறுபான்மையினர் மத தலங்கள் குறித்த சர்ச்சைக்குரிய விவாதத்தைத் தூண்டி பண்டோரா பெட்டியை திறந்து வைத்தார். இது இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே பதற்றத்தை அதிகரிக்க வழிவகுக்கும்’’ என்றார். மாநிலங்களவை எம்பி கபில் சிபல் தனது எக்ஸ் பதிவில், ‘‘அஜ்மீர் தர்காவில் உள்ள சிவன் கோயில். கவலைக்குரியது. இந்த நாட்டை எங்கே கொண்டு செல்கிறோம்? ஏன்? அரசியல் பலன்களுக்காக!’’ என்றார்.
* கேள்விக்குறியான வழிபாட்டு தலங்கள் சட்டம்
வழிபாட்டு தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் 1991 ஆனது சுதந்திரத்தின் போது இருந்த வழிபாட்டு தலங்கள், அதே மதத்தன்மையை கொண்டிருக்கும், அதை மாற்ற முடியாது என கூறுகிறது. ஆனால், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இந்த சட்டம் பொருந்தாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து வழிபாட்டு தலங்கள் சட்டம் முற்றிலும் பயனற்று போயிருப்பதாக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி முன்பு இருந்த கோயிலில் கட்டப்பட்டதா என்பதைத் தீர்மானிக்க அறிவியல் ஆய்வு நடத்த தொல்லியல் துறைக்கு உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது. இதே போல மதுரா, மத்திரப்பிரசதேம், உபி சம்பல் என அடுத்தடுத்து வழக்குகள் தொடர்கின்றன.
* இது நிறுத்தப்பட வேண்டும்
இந்த வழக்கு குறித்து தர்கா கமிட்டியினர் கருத்து தெரிவிக்க மறுத்த நிலையில், அஜ்மீர் தர்காவின் காதிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பான அஞ்சுமான் சையத் ஜட்கானின் செயலாளர் சையத் சர்வார் சிஷ்டி நேற்று அளித்த பேட்டியில், ‘‘இந்த மனு, மதவாத அடிப்படையில் சமூகத்தை சிதைக்கும் திட்டமிட்ட முயற்சி. அஜ்மீர் தர்கா, மத நல்லிணக்கம், மதச்சார்பின்மையின் சின்னம். பாபர் மசூதி வழக்கின் முடிவை ஏற்றுக் கொண்டோம். அதன்பிறகு எதுவும் நடக்காது என்று நம்பினோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக இதுபோன்ற விஷயங்கள் மீண்டும் மீண்டும் தொடர்கின்றன. இதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. இது நிறுத்தப்பட வேண்டும். மேலும், இந்த வழக்கிற்கும் தொல்லியல் துறைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அஞ்சுமான் அமைப்பை வழக்கில் சேர்க்க வேண்டும்’’ என்றார்.
The post உபியை தொடர்ந்து ராஜஸ்தானில் பரபரப்பு சிவன் கோயில் மீது அஜ்மீர் தர்கா கட்டியதாக இந்து அமைப்பு வழக்கு: ஒன்றிய அரசு, தொல்லியல் துறைக்கு நோட்டீஸ் appeared first on Dinakaran.