சென்னை: ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்ட அரசாணை: ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு உள்ளூர் செஸ், உள்ளூர் செஸ் கூடுதல் கட்டணம், முத்திரைத்தாள் கட்டணம், கேளிக்கை வரி உள்ளிட்டவை மூலம் பெறும் ஒதுக்கப்பட்ட வருவாயை ஒருங்கிணைத்து மாநில அளவில் அதனை அனைத்து ஊராட்சிகளுக்கு பகிர்ந்தளிக்க அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 2023-24ம் நிதியாண்டில் ரூ1031 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து 2024-25ம் நிதியாண்டிற்காக திரட்டப்பட்ட வருவாய் ஒதுக்கீடு செய்ய ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் அரசிடம் கோரிக்கை விடுத்தார். அதன்படி 2024-25ம் நிதியாண்டிற்கு ரூ1809 கோடியே 48 லட்சத்து 19 ஆயிரத்து 914 ஒதுக்கீடு செய்யவும், அதில் 3ல் ஒரு பங்கை கிராம பஞ்சாயத்துகள் மற்றும் பஞ்சாயத்து யூனியங்களுக்கும், 3ல் 2 பங்கை ஊரக பகுதிகளில் மேற்கொள்ளப்படும் முக்கிய திட்டங்களை செயல்படுத்த ஒதுக்கிடு செய்ய வேண்டும்.
மேலும் முதல்கட்டமாக மொத்த நிதியில் 50 சதவீதம் ரூ904 கோடியை முதல் தவணையாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். ஊரக வளர்ச்சி இயக்குநரின் கோரிக்கை கவனமாக பரிசீலித்த அரசு அதனை ஏற்றுக்கொண்டு 2024-25ம் நிதியாண்டிற்கு ரூ1809 கோடியை திரட்டப்பட்ட வருவாய் ஒதுக்கீடாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் முதல் தவணையாக ரூ904 கோடியே 74 லட்சத்து 9 ஆயிரத்து 957-ஐ விடுவிக்கவும் ஒப்புதல் வழங்கியுள்ளது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
The post உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ1809 கோடி வருவாய் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.