பெங்கல் புயலால் 12 அடி வரை கடல் சீற்றம்; மெரினா முதல் பட்டினப்பாக்கம் வரை கடலில் இறங்க பொதுமக்களுக்கு தடை: போலீசார் தீவிர ரோந்து பணி

சென்னை: பெங்கல் புயல் காரணமாக கடல் 8 முதல் 12 அடி உயரத்திற்கு அலைகள் எழும்புவதால் மெரினா முதல் பட்டினப்பாக்கம் வரையிலான கடலில் பொதுமக்கள் இறங்கவும், குளிக்கவும் போலீசார் தடை விதித்துள்ளனர்.  வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மண்டலமாக மாறி தற்போது புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயலுக்கு பெங்கல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனால் மெரினா கடற்கரை வழக்கத்தை விட அலைகள் மிகவும் ஆக்ரோஷத்துடன் காணப்படுகிறது. எனவே அலையானது 8 அடி முதல் 12 அடி உயரத்திற்கு எழும்புகிறது.

மெரினா கடற்கரை சுற்றுலா தலம் என்பதால் எப்போதும் பொதுமக்கள் கடல் அழகை ரசிக்க வந்து செல்வது வழக்கம். ஆனால் தற்போது பெங்கல் புழல் காரணமாக காற்றின் வேகமும் அதிகமாக இருப்பதால் மெரினா முதல் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் வரை மணலுடன் சூறைக்காற்று வீசுகிறது. எனவே பொதுமக்களின் பாதுகாப்பு கருதி போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் கடலில் இறங்கவோ, குளிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவால் அண்ணாசதுக்கம், மெரினா மற்றும் பட்டினப்பாக்கம் போலீசார் தனித்தனி குழுக்களாக பிரிந்து மெரினா முதல் பட்டினப்பாக்கம் கடற்கரை வரை ரோந்து வாகனம் மூலம் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த பணியில் 3 காவல் நிலையத்தில் இருந்து தலா 15 போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர மெரினா கடற்கரை உயிர் காக்கும் குழுவினர் மற்றும் குதிரைப்படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் கடற்கரைக்கு வந்தாலும், கடல் அருகே யாரும் செல்ல வேண்டாம் என்று ஒலி பெருக்கி மூலம் போலீசார் எச்சரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். மேலும், கடல் அலையின் அருகே நின்று பொதுமக்கள் செல்பி எடுக்கவும் போலீசார் தடைவித்துள்ளனர்.

The post பெங்கல் புயலால் 12 அடி வரை கடல் சீற்றம்; மெரினா முதல் பட்டினப்பாக்கம் வரை கடலில் இறங்க பொதுமக்களுக்கு தடை: போலீசார் தீவிர ரோந்து பணி appeared first on Dinakaran.

Related Stories: