அதுமட்டுமல்லாமல் சில சமயங்களில் காட்டு மாடு, யானை அங்கு பணிபுரியும் தொழிலாளர்களை தாக்கி விடுகிறது. கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை மாற்றத்தால் விலங்குகளின் தொல்லையாலும் பெரும்பாலான விவசாயிகள், மலை காய்கறி விவசாயம் மேற்கொள்வதை தவிர்த்து வருகின்றனர். இதுபோன்ற சூழலில் சில விவசாயிகள் மலை விவசாயம் செய்தாலும் அதனை கடைசி வரை விலங்குகளிடமிருந்து காப்பது சவாலாகவே உள்ளது. எனவே வனத்துறையினர் தலையிட்டு வனவிலங்குகளை விவசாய நிலங்களுக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும். குறிப்பாக யானைகளை குடியிருப்பு பகுதிக்குள் வரவிடாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெரும்பாலான கிராமங்களில் விவசாய நிலங்களில் தொல்லை தரும் யானைகளை அடர்ந்த வனங்களில் கொண்டு சென்று விட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து மலையடிவார கிராம மக்கள் கூறுகையில், இப்பகுதிகளில் சுற்றித்திரியும் காட்டு மாடுகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, ஒத்தையடி பாதையில் நடந்து செல்லும் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். மேலும் மாலை 6 மணிக்கு மேல் மலைக்கிராமத்திற்கு பொதுமக்கள் யாரும் செல்வதில்லை. இதன் காரணமாக வீடுகளுக்கு தேவையான அரிசி, பருப்பு, கடலை எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட சிரமமாக உள்ளது. எனவே, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து வனவிலங்குகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
சமீபத்திய 5 சம்பவங்கள்:
* கடந்த செப்டம்பரில், போடியில் உள்ள கீழத்தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் (40) என்ற விவசாயி, போடி வடக்கு மலை முட்டைக்கோஸ் பகுதியில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த காட்டுமாடு கிருஷ்ணனை கொம்பால் முட்டி தூக்கி வீசியது. அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மாட்டை அங்கிருந்து விரட்டியடித்தனர். இதில் அவர் படுகாயமடைந்தார்.
* கடந்த 19ம் தேதியன்று, பெரியகுளம் கீழ வடகரையை சேர்ந்த நாகேந்திரன் (50) என்ற விவசாயி, கும்பக்கரை பகுதியில் உள்ள தனது மாந்தோப்பிற்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தபோது, காட்டு மாடு ஒன்று திடீரென நாகேந்திரனை துரத்தி தாக்கியது. இதில் நிலைகுலைந்த நாகேந்திரன், டூவீலரிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார்.
* கடந்த இரு தினங்களுக்கு முன்னர், கூடலூர் மேளகாரத் தெருவைச் சேர்ந்த துரைப்பாண்டி (45) என்னும் தொழிலாளி வெட்டுக்காடு பகுதியில் உள்ள தோட்டத்தில் வெண்டைக்காய் ஒடித்துக் கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த காட்டுமாடு அவரை முட்டித் தள்ளியது. இதில், அவர் படுகாயம் அடைந்தார்.
* மூணாறு அருகே கொரண்டிக்காடு எஸ்டேட்டில் கூலி தொழிலாளியான முருகன் என்பவருக்கு சொந்தமான கறவை பசு, கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் வழக்கம்போல மேய்ச்சலுக்குச் சென்றது. அப்போது தேயிலை தோட்டம் அருகே மேய்ந்து கொண்டிருந்த பசுவை, புலி தாக்கி கொன்றது.
* மூணாறு அருகே உள்ள வாகுவாரை எஸ்டேட் நாவல் டிவிஷனை சேர்ந்த கூலி தொழிலாளியான முத்துப்பாண்டி என்பவரின் கறவை பசு, மேச்சலுக்கு சென்று விட்டு வீடு திரும்பவில்லை. இதனையடுத்து இரவு முழுவதும் பசு மாட்டை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
நேற்று முன் தினம் காலையில் வேலைக்கு சென்ற தொழிலாளிகள், இறைச்சல்பாறை அருகே புலி தாக்கி கொன்ற நிலையில் பசுவின் பாதி உடலை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுபோன்று கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 10 பசுக்களை புலி தாக்கி கொன்ற சம்பவம் நடந்துள்ளது. இது போன்ற சம்பவங்களால் விவசாயிகள், தொழிலாளர்கல் அச்சமடைந்துள்ளனர்.
The post மேற்கு தொடர்ச்சி மலைக்கிராமங்களில் தொடரும் வன விலங்குகள் தாக்குதல்: விவசாயிகள், தொழிலாளர்கள் அச்சம் appeared first on Dinakaran.