சென்னை, நவ.28: போக்குவரத்து துறையின் இணையதளத்தில் அங்கீகரிக்கப்பட்ட பயண வழி உணவகங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் வெகுதூரம் இயக்கப்படும் பேருந்துகள், பயணத்தின்போது 3 அல்லது 4 மணி நேர இடைவெளியில் உணவுக்காக அங்கீகரிக்கப்பட்ட சாலையோர உணவகங்களில் நிறுத்தப்படுகின்றன. இதற்காக போக்குவரத்துத்துறை சார்பில், ஆண்டுதோறும் டெண்டர் கோரப்படுகிறது. ஒப்பந்தம் பெறும் உணவகங்களில் மட்டுமே அரசு பேருந்துகள் உணவு இடைவேளைக்காக நின்று செல்லும்.
அந்த வகையில், ஒவ்வொரு மாதமும் தங்கள் உணவகத்தில் நின்ற அரசு பேருந்துகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப குறிப்பிட்ட தொகையை ஜிஎஸ்டியுடன் போக்குவரத்து கழகத்துக்கு உணவகங்கள் செலுத்தி வருகின்றன.
ஆனால், ஒப்பந்தம் பெறாத உணவகங்களில் அரசு பேருந்துகள் நிறுத்தப்படுவதாக பயணிகள் தரப்பில் தொடர் குற்றச்சாட்டு வந்தன. இதையடுத்து, அங்கீகரிக்கப்பட்ட உணவகங்களின் பட்டியலை வெளியிடுமாறு போக்குவரத்து ஆர்வலர்களிடம் கோரிக்கை எழுந்தது. இதன் தொடர்ச்சியாக 52 அங்கீகரிக்கப்பட்ட உணவகங்களின் பட்டியல் www.arasubus.tn.gov.in/motel.php என்னும் போக்குவரத்துத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
The post போக்குவரத்துத் துறை இணையதளத்தில் அங்கீகரிக்கப்பட்ட பயணவழி ஓட்டல்கள் விவரம் வெளியீடு appeared first on Dinakaran.