பல்லாவரம், நவ.28: பல்லாவரம் அடுத்த பம்மல், நாகல்கேணி பகுதியில் அம்மா உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு காலை, மாலை இரு வேளைகளில் குறைந்த விலையில் உணவு விற்பனை செய்யப்படுவது வழக்கம். இதை ஏழை, எளியோர்கள், கூலி வேலை செய்பவர்கள் உண்டு பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை அம்மா உணவகத்தின் மேற்கூரை பால் சீலிங் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இதில், அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த உமா (46) என்ற பெண் படுகாயம் அடைந்தார். அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்ததும், சம்பவ இடத்திற்கு வந்த சங்கர் நகர் போலீசார், கடந்த இரு தினங்களாக சென்னை புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்தது. அதன் காரணமாக மேற்கூரை இடிந்து விழுந்ததா அல்லது முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் இடிந்து விழுந்ததா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post அம்மா உணவக மேற்கூரை இடிந்ததில் பெண் ஊழியர் காயம் appeared first on Dinakaran.