சென்னை: ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ மையம், சென்னை கே.கே.நகரில் அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளது. சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கண்டறிவது எப்படி, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் என்ன, சிகிச்சைக்கு பின்னர் அவர்களிடம் தெரியும் முன்னேற்றங்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில், தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் சி.ஜி.தாமஸ் வைத்யன், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன், பேச்சு-கேள்வியியல் துறை டாக்டர் ஜெயா உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் கலந்துகொண்டனர். அப்போது, ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரிக்க அவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்தும், பேச்சு பயிற்சி மற்றும் பிசியோதெரபி உள்ளிட்டவை மூலம் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடலில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
தொடர்ந்து, டீன் தேரணி ராஜன் பேசியதாவது: ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதன் மூலம் பாதிப்பை எளிதாக சரி செய்ய முடியும். ஒருசில பெற்றோர் தங்களது குழந்தைகள் தாமதமாக பேசுவார்கள் என்று நினைத்து அஜாக்கிரதையாக இருக்கிறார்கள். குழந்தை பேசாத நிலையில் ஆட்டிசம் சிகிச்சைக்கு தாமதமாக வருகின்றனர். எனவே, இதுபோன்ற ஆட்டிசம் பாதுப்புகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், தமிழக அரசு ஆட்டிசத்திற்கான சிறப்பு மையத்தை சென்னை கே.கே.நகரில் டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
The post கே.கே.நகர் பகுதியில் ஆட்டிசம் பாதிப்புக்கான சிறப்பு மருத்துவ மையம்: அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது appeared first on Dinakaran.