சென்னை, நவ. 28: வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பெங்கல் புயலாக மாறி அச்சுறுத்திக்கொண்டு இருப்பதால், இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில், மோசமான வானிலை நிலவுகிறது. இதனால் நேற்று சென்னை- யாழ்ப்பாணம்- சென்னை இடையே இயக்கப்படும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதன்படி, பகல் 12.50 மணிக்கு, சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் செல்ல வேண்டிய அலையன்ஸ் ஏர் பயணிகள் விமானம், பகல் 1.55 மணிக்கு சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 2 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அதேபோல் யாழ்ப்பாணத்தில் இருந்து மாலை 4.35 மணிக்கு சென்னை வரவேண்டிய அலையன்ஸ் ஏர் பயணிகள் விமானம், மாலை 5.10 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து சென்னை வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 2 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இன்று யாழ்ப்பாணத்தில் நிலவும் வானிலை சூழ்நிலைக்கேற்ப, விமானங்கள் இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும். எனவே யாழ்ப்பாணம் பயணிகள், அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு, விமானங்கள் இயக்குவது குறித்து கேட்டு அறிந்து கொண்டு, தங்கள் பயண திட்டத்தை வகுத்துக் கொள்ள வேண்டும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post யாழ்ப்பாணத்தில் மோசமான வானிலை சென்னையில் 4 விமானங்கள் ரத்து appeared first on Dinakaran.