அலையின் சீற்றத்தால் மெரினா, திருவொற்றியூர் கடற்கரையில் அடுத்தடுத்து கரை ஒதுங்கிய மிதவை கருவிகள்: பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்

சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது மண்டலமாக உருவாகியுள்ளதால் மெரினா கடல் பகுதி வழக்கத்தை விட மிகவும் ஆக்ரோஷமாக 8 அடி உயரத்திற்கு அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. அதேநேரம் இன்று அதிகாலை முதல் காற்றின் வேகமும் அதிகரித்துள்ளது. இதற்கிடையே சென்னை துறைமுகத்திற்கு வரும் கப்பல்கள் மற்றும் மீன்பிடி படகுகளுக்கு இருப்பிடம் மற்றும் அபாய எச்சரிக்கை குறித்து சமிக்ஞை கருவிகள் பொருத்தப்பட்ட மிதவைகள் வங்கக்கடல் முழுவதும் குறிப்பிட்ட கடல் மைல் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது.

புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த மண்டலமாக மாறியதால் கடல் அலைகள் அதிக உயரத்திற்கு எழுப்புவதால், கப்பல்களுக்கு வழிகாட்டி மற்றும் சமிக்ஞை மிதவை கருவி நேற்று காலை மெரினா கடற்கரையில் கரை ஒதுங்கியது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில், அண்ணாசதுக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மிதவை கருவி கரை ஒதுங்கியது குறித்து துறைமுகம் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி துறைமுக அதிகாரிகள் மற்றும் கடலோர காவல் படையினர் வந்து மிதவையை துறைமுகத்திற்கு எடுத்தும் சென்றனர்.

கரை ஒதுங்கிய மிதவை கருவியை மெரினாவுக்கு வந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். சிலர் மிதவையின் அருகே நின்று செல்போன்களில் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து கொண்டனர். அதேபோல், திருவொற்றியூர் கடற்கரை பகுதியில் நேற்று சமிக்ஞை மிதவை கருவி ஒன்று கரை ஒதுங்கியது. இதையடுத்து அப்பகுதி மீனவர்கள் அளித்த தகவலின் படி துறைமுகம் அதிகாரிகள் மிதவை கருவையை கடலோர காவல்படை உதவியுடன் மீட்டு சென்றனர். கடல் சீற்றத்தால் நேற்று ஒரே நாளில் மெரினா மற்றும் திருவொற்றியூர் கடற்கரை பகுதிகளில் அடுத்தடுத்து மிதவை கருவிகள்கரை ஒதுங்கியதால், அப்பகுதிகளில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post அலையின் சீற்றத்தால் மெரினா, திருவொற்றியூர் கடற்கரையில் அடுத்தடுத்து கரை ஒதுங்கிய மிதவை கருவிகள்: பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: