மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி தொடர்பாக தேவநாதன் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்: அமலாக்கத்துறை உறுதி

சென்னை: மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி தொடர்பாக தேவநாதன் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமலாக்கத்துறை உறுதி அளித்துள்ளது. சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த மயிலாப்பூர் இந்து நிரந்தர வைப்பு நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 145 முதலீட்டாளர்களிடம் ரூ.74 கோடியே 50 லட்சம் மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனம் அதன் இயக்குனர் தேவநாதன், ராஜா, குணசீலன், மோகன்ராஜ், மகிமைநாதன், தேவசேனாபதி உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த விவகாரத்தில் ரூ.300 கோடிக்கு மோசடி நடந்துள்ளதால் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று மயிலாப்பூர் முதலீட்டாளர்கள் நலச்சங்க தலைவர் சதீஷ்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று எஸ்.எம்.சுப்ரமணியம், என். ஜோதிராமன் தலைமையில் நடைபெற்றது.

அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறைக்கு கிடைத்த தகவல் மூலம் வழக்கு ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

 

The post மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி தொடர்பாக தேவநாதன் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்: அமலாக்கத்துறை உறுதி appeared first on Dinakaran.

Related Stories: