தகுதியுள்ள நிறுவனங்கள், பொதுமக்கள் தேசிய நீர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தகுதியுள்ள நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் 6வது தேசிய நீர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகம் நீர்வளத்துறையின் மூலம், 2018ம் ஆண்டு முதல் ஜல்சக்தி தேசிய நீர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. நீர்வளத்துறை மக்கள் செய்யும் பணிகளை அங்கீகரிப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துவதோடு, நீர் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை தொடர்பாக மக்கள் செய்யும் பணிகளுக்கு ஊக்கமளிக்க அதிக ஆர்வத்துடன் உள்ளதால், 6வது தேசிய நீர் விருது 2024க்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் கிராம ஊராட்சிகள், நகர்ப்புற அமைப்புகள், பெரு நிறுவனங்கள் துறை, சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இந்த துறையில் பணிபுரியும் தனிநபர்கள் உட்பட பல்வேறு பங்குதாரர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், 6வது தேசிய நீர் விருதுகள் இந்த ஆண்டு அக்டோபர் 23ம் தேதி தொடங்கப்பட்டு, தற்போது இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பாக 1.சிறந்த மாவட்டம், 2.சிறந்த கிராம ஊராட்சி, 3.சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், 4.சிறந்த பள்ளி (அ) கல்லூரி, 5.சிறந்த நிறுவனம் (பள்ளி (அ) கல்லூரி தவிர்த்து), 6.சிறந்த தொழில், 7.சிறந்த கட்டுமான நிறுவனம், 8.சிறந்த நீர்பாசன பயனர் சங்கம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படவுள்ளது. மேலும், பொதுமக்கள் தகவலுக்காக ராஷ்ட்ரிய புரஸ்கர் போர்டல் (Rashtriya Puraskar Portal) (www.awards.gov.in) அல்லது ஜல்சக்தி துறையின் இணையதளத்தை (www.Jalshakti-dowr.gov.in) பார்வையிடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்படி, வலைதளத்தில் விருதுக்களுக்கான உள்ளீடுகளை டிசம்பர் 31ம்தேதிக்குள் அனைத்து நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு பதிவேற்றம் செய்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post தகுதியுள்ள நிறுவனங்கள், பொதுமக்கள் தேசிய நீர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: