கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் 100 நுண்துளை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 100 நுண் துளை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரியில், கடந்த 2 ஆண்டுகளில் ஆபரேஷன் இல்லாத, 100 நுண்துளை அறுவை சிகிச்சை நடந்ததை, நோயாளிகளுடன் மருத்துவர்கள் நேற்று கேக் வெட்டி கொண்டாடினர். இதுகுறித்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர். பூவதி கூறியதாவது:

கிருஷ்ணகிரி அடுத்த போலுப்பள்ளியில் அமைந்துள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஆப்பரேஷன் இல்லாமல் முழங்கால் மூட்டு, தோள்பட்டை மூட்டு சவ்வு காயங்களுக்கு, ஆர்த்தோஸ்கோபி எனப்படும் நுண்துளை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதில், எலும்பு சிகிச்சை பிரிவு மருத்துவர் செந்தில், உதவி பேராசிரியர் டாக்டர். ரமேஷ்குமார் ஆகியோர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமல்லாது, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர், மூட்டு பிரச்னைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருகின்றனர். அவர்களில், அவசர சிகிச்சை தேவைப்படுவோர்கள் வரிசையில், நாட்கள் ஒதுக்கி நுண்துளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகின்றன.

தற்போது 100வது நுண்துளை அறுவை சிகிச்சையாக தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்த கோபிநாத்(33) என்பவருக்கு கால் மூட்டில் நுண்துளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த, 105 கிலோ எடையுள்ள அம்ரிஷ் என்பவர் உள்பட, 20க்கும் மேற்பட்டோருக்கு கடினமான உயர்தர நுண்துளை ஆப்பரேஷன் செய்யப்பட்டுள்ளது.

இம்மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கால் மூட்டுகளில் முன்புறம் மற்றும் பின்புறம் தசைநார்களை இணைக்கும் நுண்துளை அறுவை சிகிச்சைகள், சவ்வு பிரச்னை, தோள் பட்டை வலி, மூட்டு விலகல் சம்பந்தமாக, இதுவரை, 150 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, இன்று வரை 100 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இந்த சிகிச்சை மூலம் குறைந்த வலி, குறைந்த ரத்தப் போக்குடன், 2 அல்லது மூன்று தையலுடன் மட்டும், பெரிய பிரச்னைகள் தீர்த்து வைக்கப்படுகிறது. இந்த நுண்துளை ஆபரேஷனுக்கு தனியார் மருத்துவமனைகளில், ரூ.80 ஆயிரம் முதல் ரூ.2.50 லட்சம் வரை செலவாகும் நிலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவ காப்பீடு திட்டத்தில் இலவசமாக மேற்கொள்ளப் படுகிறது.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் எலும்பியல் பிரிவில் பணிபுரியும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி குணமடைந்த, 20 பேருடன் கேக் வெட்டி கொண்டாடினர்.

எலும்பியல் துறை மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி நிர்வாக அலுவலர் சரவணன், செவிலியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் 100 நுண்துளை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை appeared first on Dinakaran.

Related Stories: