இப்பகுதியில் உள்ள விவசாய பொதுமக்கள் பெரிதும் விவசாயத்தை மட்டுமே நம்பி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் அமைந்துள்ள கண்மாய்கள் மற்றும் குளம் குட்டைகள் நல்ல மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் நிரம்பும் என்ற சூழல் உள்ளது.
இந்நிலையில் இப்பகுதியில் நெல் விதைப்பு செய்து பயிர் முளைத்து வளர்ந்து வருவதால், விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், களைக் கொல்லி மருந்து அடித்தல், களை எடுத்தல், பயிர் நடுதல், உரமிடுதல் என விவசாயம் சார்ந்த விவசாய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் பெரும்பாலான கிராமங்களில் போதிய மழை இல்லாமல் கண்மாய்கள் நிரம்பாமல் உள்ளது. மேலும் மழை பெய்யாமல் போனால் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விடுமே என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விவசாயி பாரனூர் ராஜேந்திரன் கூறுகையில், விவசாயிகளான நாங்கள் விவசாய நிலங்களை உழவு செய்தல், விதைப்பு, களைக் கொல்லி மருந்து அடித்தல், களை எடுத்தல், உரமிடுதல் உள்ளிட்ட ஏராளமான செலவு செய்து தான் விவசாயம் செய்கிறோம். களை எடுப்பதற்கு கூலியாக நபர் ஒன்றுக்கு ஒரு நாளைக்கு ரூ.300 முதல் 400 வரை கொடுக்கிறோம். ஏக்கருக்கு சுமார் ரூ.15 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்து வருகிறோம்.
ஆனால் இந்த ஆண்டு எங்கள் கிராமமான பாரனூர் உள்ளிட்ட கிராமங்களில் போதிய மழை இல்லாததால் கண்மாய் நிறையவில்லை. கண்மாய் நிறைந்து இருந்தால் எப்படியும் கண்மாய் தண்ணீரை வைத்து நெல்லை விளைய வைத்து விடலாம். ஆனால் கண்மாயில் போதிய அளவு தண்ணீர் இல்லாமல் உள்ளதால், மேலும் மழை பெய்தால்தான் விவசாயம் கைக்கு வரும். எங்கள் நிலைமையை நினைத்தால் மிகுந்த கவலையாக தான் உள்ளது என கவலையுடன் தெரிவித்தார்.
The post கண்மாயில் போதிய அளவு தண்ணீர் இல்லை மழை இல்லாததால் விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.