முதுகலை மருத்துவ படிப்பில் சேர போலி என்ஆர்ஐ சான்றிதழ் கொடுத்த 44 பேர்: குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள மருத்துவ மாணவர் சேர்க்கை குழு முடிவு

சென்னை: தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான சிறப்பு கலந்தாய்வு நேற்று தொடங்கியது. மொத்தம் 57 எம்.பி.பி.எஸ்., 28 பி.டி.எஸ். இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடக்கிறது. வருகிற 28ம் தேதி தேதியுடன் இந்த கலந்தாய்வு நிறைவுபெறும். மாணவர்களுக்கு இறுதி ஒதுக்கீடு ஆணை 29ம் தேதி வழங்கப்படும். அதன் பின்னர் அவர்களுக்கான கல்லூரிகளில் மாணவர்கள் டிசம்பர் 5ம் தேதிக்குள் சேர வேண்டும்.

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வெளிப்படைத்தன்மையுடன் எந்தவிதமான முறைகேடுகளும் நடக்காத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருகிறது. மருத்துவ மாணவர் சேர்க்கையின் ஒருபகுதியாக மாணவர்களின் சான்றிதழ்களை ஆய்வுக்கு உட்படுத்தி சரிபார்ப்பது வழக்கம். அவ்வாறு ஆவணங்களின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ததில் நடப்பாண்டில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்திருந்த 6 பேரின் தூதரக சான்றிதழ்கள் போலியானவை என்பது கண்டறியப்பட்டது.

அதில் 3 பேர் எம்பிபிஎஸ் இடங்களுக்கான ஒதுக்கீடு பெற்றவர்களாவர். இதையடுத்து அந்த 6 பேரும் மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்பதில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி அவர்களில் 3 பேருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட எம்பிபிஎஸ் இடங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 3 பேர் சேர்க்கை ஆணை பெற்ற நிலையில், அதனை ரத்து செய்யப்பட்டு அந்த இடங்களும், இந்தக் கலந்தாய்வில் சேர்க்கப்பட்டுள்ளது.

போலியாக சான்றிதழ் அளித்த 6 மாணவர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கு சட்ட ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், முதுகலை மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வும் தொடங்க உள்ளது. இந்த இடங்களில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்த மருத்துவர்களில் 44 மாணவர்கள் போலியாக என்ஆர்ஐ சான்றிதழ் அளித்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு அனுப்பியபோது அவர்கள் போலி என்ஆர்ஐ சான்றிதழ் அளித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மருத்துவ மாணவர் சேர்க்கை குழு கூறுகையில், தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு திறமையாக செயல்படுகிறது. அதனால் தான் போலி சான்றிதழ்கள் சமர்ப்பித்தவர்களை இவ்வளவு விரைவாக கண்டறிய முடிகிறது. போலிச்சான்றிதழ் சமர்ப்பித்த மாணவர்கள் மீதும் காவல்துறையில் புகார் அளிக்க சட்ட ஆலோசனை பெறப்பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.

The post முதுகலை மருத்துவ படிப்பில் சேர போலி என்ஆர்ஐ சான்றிதழ் கொடுத்த 44 பேர்: குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள மருத்துவ மாணவர் சேர்க்கை குழு முடிவு appeared first on Dinakaran.

Related Stories: