உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் மசூதியில் தொல்லியல் குழுவினர் ஆய்வுசெய்ய எதிர்ப்பு: வன்முறையில் 4 பேர் பலி, 30 காவலர்கள் காயம்

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் மசூதியில் ஆய்வு நடத்துவதற்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். சம்பல் மாவட்டத்தில் அமைந்துள்ள முகலாயர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட ஷாகி ஜாமா என்ற மசூதி இந்து கோவில் மீது கட்டப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சம்பல் மாவட்ட நீதிமன்றம் மசூதியில் ஆய்வு நடத்த உத்தரவிட்டது.

இதை அடுத்து நேற்று காலை 7.30 மணி அளவில் ஷாகி ஜாமா மசூதிக்கு சென்ற தொல்லியல் குழுவினர் ஆய்வு தொடங்கினர். அப்போது அங்கு வந்த சிலர் ஆய்வு நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டம் சிறிது நேரத்தில் பெறும் வன்முறையாக வெடித்தது. பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த 100க்கும் மேற்பட்ட காவலர்கள் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். போலீஸ் வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. பதிலுக்கு காவலர்களும் கற்களை வீசியதோடு கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். துப்பாக்கி சூடும் நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த வன்முறையில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர சம்பல் தாலுகாவில் 24 மணி நேரத்திற்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. சம்பல் சுற்றுவட்டாரத்தில் உள்ள 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. கூடுதலாக காவலர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். வெளி ஆட்கள் சம்பலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் தில்லுமுல்லு அரங்கேறியதாகவும் அதனை திசைதிருப்ப பாஜகவினர் திட்டமிட்டே இந்த வன்முறையை உருவாக்கியதாகவும், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

The post உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் மசூதியில் தொல்லியல் குழுவினர் ஆய்வுசெய்ய எதிர்ப்பு: வன்முறையில் 4 பேர் பலி, 30 காவலர்கள் காயம் appeared first on Dinakaran.

Related Stories: