திருத்துறைபூண்டி, நவ. 23: கனமழையால் சேதமடைந்த பேருந்து நிலையத்தை சீரமைக்கும் பணிகளை நகர் மன்ற தலைவர் நேரில் பார்வையிட்டார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2023-24 இன் கீழ் ரூ 7 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் மேம்பாடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதுவரை மக்களுடைய நலன் கருதி திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட திருவாரூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் எதிர்புறம் ஒரு தற்காலிக பேருந்து நிலையமும் திருவாரூர் சாலையில் உள்ள கால்நடை மருத்துவமனை ஒட்டி ஒரு தற்காலிக பேருந்து நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. தற்காலிக பேருந்து நிலையத்தில் பெட்ரோல் பங்குக்கு எதிர்ப்புறம் உள்ள பேருந்து நிலையத்தில் வேதாரண்யம் மார்க்கமாக வரக்கூடிய பேருந்துகளும் மன்னார்குடி வழியாக வரக்கூடிய பேருந்துகளும் இயக்கப்படும். கால்நடை மருத்துவமனை அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் திருவாரூர் மார்க்கமாக வரக்கூடிய பேருந்துகள் நாகப்பட்டினத்தில் இருந்து வரக்கூடிய பேருந்துகள் பட்டுக்கோட்டையில் இருந்து வரக்கூடிய பேருந்துகள் கடந்த மே மாதம் 12 தேதிமுதல் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்காலிக பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வந்து செல்லும் சாலை தவிர பேருந்து நிற்கும் இடங்கள் தொடர் மழையால் சேதமடைந்துள்ளதையடுத்து தற்போது சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் பணிகளை பார்வையிட்டார்.
The post கனமழையால் சேதமடைந்த பேருந்து நிலையம் சீரமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.