அரக்கோணம் அருகே இன்று காலை அடுத்தடுத்து 2 இடங்களில் மின்சார ரயில் நிற்காததால் பயணிகள் அதிர்ச்சி: அதிகாரிகள் விசாரணை


அரக்கோணம்: அரக்கோணம் அருகே இன்று காலை அடுத்தடுத்து 2 ரயில் நிலையங்களில் புறநகர் மின்சார ரயில் நிற்காமல் சென்றது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில்வே ஜங்ஷனில் இருந்து தினமும் வடமாவட்டங்கள் மற்றும் தென் மாநிலங்களுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான ரயில்கள் இயக்கப்படுகிறது. மேலும் அரக்கோணத்தில் இருந்து திருவள்ளூர் வழியாக சென்னைக்கும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக சென்னைக்கும் என பல்வேறு மார்க்கங்களில் நூற்றுக்கணக்கான புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனை ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தினமும் காலை 6.40 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு விரைவு மின்சார ரயில் செல்லும். இந்த ரயில் திருவள்ளூர் ரயில் நிலையம் இடையே அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும். அதன்பிறகு திருவள்ளூரில் இருந்து ஒரு சில நிறுத்தத்தில் மட்டும் நிற்கும். இந்நிலையில் வழக்கம்போல் இன்று காலை 6.40 மணியளவில் அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு இந்த விரைவு மின்சார ரயில் சென்றது. புளியமங்கலம் ரயில் நிலையத்தில் இந்த ரயில் நிற்காமல் சென்றது. இதனால் அங்கு காத்திருந்த ஏராளமான பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். ரயிலில் இருந்த பயணிகளும் புளியமங்கலத்தில் இறங்கமுடியாத நிலை ஏற்பட்டது.
அதேபோல் மோசூர் ரயில் நிலையத்திலும் நிற்காமல் சென்றது. இதற்கிடையில் அந்த ரயில் திருவள்ளூரில் நின்றது.

அரக்கோணம் அருகே அடுத்தடுத்து 2 ரயில் நிலையங்களில் நிற்காமல் சென்றது குறித்து ரயில்வே நிர்வாகத்திற்கு பயணிகள் தெரிவித்தனர். இதனால் திருவள்ளூரில் நின்ற ரயிலில் பணியில் இருந்த டிரைவர், கார்டு ஆகியோரை அதிகாரிகள் ரயிலில் இருந்து இறக்கிவிட்டு வேறு டிரைவர், கார்டை நியமித்து ரயிலை சென்னைக்கு இயக்கினர். இதனை தொடர்ந்து வழக்கமாக நிற்கும் இடங்களில் ரயிலை நிறுத்தாமல் வந்தது ஏன்? என்பது குறித்து சம்பந்தப்பட்ட டிரைவர், கார்டுவிடம் ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அரக்கோணம் அருகே இன்று 2 ரயில் நிலையங்களில் ரயில் நிற்காமல் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post அரக்கோணம் அருகே இன்று காலை அடுத்தடுத்து 2 இடங்களில் மின்சார ரயில் நிற்காததால் பயணிகள் அதிர்ச்சி: அதிகாரிகள் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: