பருவமழை தீவிரமடையாததால் குளங்கள் வறண்டு கிடக்கிறது மானூர் வட்டாரத்தில் விவசாய பணிகளை தொடங்குவதில் தாமதம்

*தரிசாக காட்சியளிக்கும் விளைநிலங்கள்

*வறட்சி பகுதியாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை

மானூர் : வடகிழக்கு பருவமழை தீவிரமடையாத சூழலில் மானூர் வட்டாரத்தில் குளங்கள் வறண்டு கிடப்பதால் விவசாயப்பணிகளை தொடங்காமல் விவசாயிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக காட்சியளிக்கிறது. மழை எப்போது தீவிரமடையும் என்று எதிர்நோக்கி இப்பகுதி விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் முக்கிய விவசாய பகுதியாக மானூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 80க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளது. இந்த பகுதியில் நெல், வாழை, பூ போன்றவைகளை பயிரிடுகின்றனர். இந்த பகுதி விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக பெரியகுளம், பள்ளமடைகுளம் உட்பட அனைத்து கிராமங்களிலுள்ள குளங்களை நம்பி தான் உள்ளனர்.

வடகிழக்கு பருவமழையை வைத்து தான் இப்பகுதி மக்கள் விவசாய வேலையை ஆரம்பிப்பது வழக்கம். தமிழகத்தில் கடந்த அக்.15ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வட மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்த நிலையில் தென் மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. நெல்லையை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை கண்ணா மூச்சி காட்டி வருகிறது. சிறிய குளங்களில் பெரும்பாலானவை வறண்டு கிடக்கிறது. மானூர் பெரியகுளம், பள்ளமடை குளம் குறைந்த அளவே நீர் இருப்பு உள்ளது.

குறிப்பாக 1120 ஏக்கர் பரப்பளவு கொண்ட மானூர் பெரிய குளம் 180 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. இந்த குளம் மூலம் மானூர், மாவடி, மதவக்குறிச்சி, எட்டான்குளம் ஆகிய 4 ஊராட்சிகளுக்குட்பட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 4 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மானூர் குளத்துக்கு முன்பாக 19 குளங்கள் நிரம்பிய பின்னரே தண்ணீர் மானூர் பெரிய குளத்துக்கு வரும். ஆனால் அதற்குள் வடகிழக்கு பருவமழை முடிந்து விடுவது உண்டு.

ஆனால் இந்த குளம் நிரம்பும் போதெல்லாம் விவசாயிகள், பிசானம், முன்கார் ஆகிய இரு பருவ சாகுபடியை வெற்றிகரமாக மேற்கொள்வர். ஆனால் மானூர் பகுதியில் பருவமழை தீவிரமடையாத சூழலில் பெரிய குளம், பள்ளமடை குளத்தில் நீர் இருப்பு என்பது மிகவும் குறைவாக தான் உள்ளது. இதனால் வடகிழக்கு பருவமழை துவங்கி 1 மாதங்களுக்கு மேலான நிலையில் விவசாய பணிகளை தொடங்காமல் விவசாயிகள் தாமதித்து வருகின்றனர். இதனால் விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக காட்சியளிக்கிறது. மழை எப்போது தீவிரமடையும் என்று எதிர்நோக்கி இப்பகுதி விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

இது குறித்து மானூர் பெரியகுளம் விவசாயத் சங்கத் தலைவரும், மானூர் பெரியகுளம் விவசாய நிலக்கிழாருமான வேதமணி கூறுகையில், ‘வடகிழக்கு பருவமழை வழக்கமாக அக்டோபர் இரண்டாவது வாரத்தில் தான் தொடங்கும். அதே போன்று இந்தாண்டு அக்.15ம் தேதி தொடங்கியது. ஆனால் தற்போது வரை பருவமழை தீவிரமடையவில்லை. இப்பகுதியை பொறுத்தவரை அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி நவம்பர் மாதங்களில் குளங்கள் பெருகி தற்போது நெல்நடுவை முடியும் தருவாயில் உள்ள காலகட்டமாகும்.

ஆனால் இதுவரையிலும் பருவமழை பொய்த்து வருகின்றன. இதனால் நெல் நாற்றுப்பாவுதல், வயல்களை சரிசெய்து பக்குவப்படுத்துதல் போன்ற பணிகள் செய்ய இயலாமல் விளைநிலங்கள் தரிசுகளாக காட்சியளிக்கின்றன. வரும் டிசம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் விவசாயப்பணிகளுக்கு பயனற்றதாக உள்ளது. நெல் நாற்றுகள் பாவுதல், நிலம் பக்குவப்படுத்துல் போன்ற பணிகளுக்கு அதன்பின் காலங்கள் இல்லை.

நெல் நாற்றுகள் ரெடிமேடாக கிடைப்பதற்கும் வாய்ப்புகள் குறைவு. எனவே மானூர் வட்டாரத்திலுள்ள அனைத்து கிராமங்களின் விவசாயப்பணிகள் தடைப்பட்டுள்ளது. ஒரு சிலர் மட்டுமே கிணற்றுப் பாசன விவசாயிகள் மட்டும் தங்கள் நீர் ஆதாரத்திற்கு ஏற்ப விவசாயப்பணிகளை தொடங்கியுள்ளனர். எனவே எனவே மானூர் வட்டாரத்தை வறட்சி பகுதியாக அறிவிக்கவேண்டும்’ என்றார்.

The post பருவமழை தீவிரமடையாததால் குளங்கள் வறண்டு கிடக்கிறது மானூர் வட்டாரத்தில் விவசாய பணிகளை தொடங்குவதில் தாமதம் appeared first on Dinakaran.

Related Stories: