இந்தியா கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வர வாய்ப்பு: காங். தலைவர் செல்வபெருந்தகை தகவல்

நெல்லை: இந்தியா கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று நெல்லையில் தெரிவித்தார். நெல்லை மாவட்டத்தில் நடந்து வரும் பல்வேறு திட்டப் பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற பொதுக் கணக்குக் குழுத் தலைவரும், தமிழக காங்கிரஸ் தலைவருமான செல்வபெருந்தகை எம்எல்ஏ தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். நெல்லை அரசு சுற்றுலா மாளிகையில் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப பூங்கா தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இதில் ஒரு வழக்கில் வெற்றி பெற்ற நிலையில் எம்சிஎல்டி நிறுவனத்திடமிருந்து 590 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 1800 ஏக்கர் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் நிறைவு பெற்றவுடன் தொழில்நுட்ப பூங்கா செயல்பாட்டுக்கு வரும். பூங்கா மூலம் தென்மாவட்ட மக்கள் அதிக வேலைவாய்ப்புகளை பெறுவர்.

இந்தியா கூட்டணியை பொறுத்தவரை எழுத்து, கருத்து சுதந்திரத்திற்கு தடையேதும் இல்லை. எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. இக்கூட்டணி சமுத்திரம் போல் காட்சியளிப்பதால் அதில் சில அலைகள் இருக்கத்தான் செய்யும். தேர்தல் சமயத்தில் அலைகள் ஓய்ந்து அமைதி ஏற்படும். இந்தியா கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வர வாய்ப்புகள் உள்ளன. ஜார்கண்ட், மகாராஷ்டிரா மாநில தேர்தல்களில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். வயநாடு தேர்தலில் பிரியங்கா மிகப் பெரிய வெற்றியை ஈட்டுவார். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் 2, 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாக ஐஜி குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை எடுத்தோம், கவிழ்த்தோம் என்கிற மாதிரி யாரையும் குற்றவாளி என தீர்மானிக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post இந்தியா கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வர வாய்ப்பு: காங். தலைவர் செல்வபெருந்தகை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: