ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீதான விசாரணைக்கு தடை: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கடந்த 2006ம் ஆண்டு ஒன்றிய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்த போது, தனது அதிகாரத்திற்கு அப்பாற்பட்டு ஏர்செல்-மேக்சிஸ் நிறுவனங்கள் இடையேயான முதலீட்டு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்ததாகவும், இதன் மூலம் லஞ்சம் பெறப்பட்டதாகவும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டி சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு பதிவு செய்துள்ளன. ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிராக விசாரணை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றபத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதை எதிர்த்து ப.சிதம்பரம் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி மனோஜ் குமார் ஓஹ்ரி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஹரிஹரன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள், ‘‘குற்றம் நடந்ததாக கூறப்படும் சமயத்தில் ஒன்றிய அமைச்சராக ப.சிதம்பரம் இருந்ததால், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 197(1)ன் கீழ் அவர் மீது வழக்கு தொடர அரசிடம் அனுமதி பெறுவது கட்டாயம். ஆனால் இன்று வரை அமலாக்கத்துறை அதை செய்யவில்லை’’ என்றனர். இதைக் கேட்ட நீதிபதி, அடுத்த விசாரணை வரை, விசாரணை நீதிமன்றத்தின் விசாரணைக்கு தடை விதித்தார்.

The post ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீதான விசாரணைக்கு தடை: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: