புழல்: செங்குன்றம் அருகே சோழவரத்தில் சாலை அகலப்படுத்தும் பணிக்காக கோயில் மண்டபம் இடிக்கப்பட்டது. இதனால் பெண் பக்தர்கள் கண்ணீர் வடித்தனர். சென்னை சோழவரம் அடுத்த அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி பழமைவாய்ந்த சிலம்பாத்தம்மன் ஆலயம் உள்ளது. இந்த நிலையில், சர்வீஸ் சாலை பணிக்காக இந்த கோயிலின் முகப்பு மண்டபத்தை இடிப்பது தொடர்பாக கிராம மக்கள், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தநிலையில் இன்று காலை ஏராளமான போலீசாருடன் நெடுஞ்சாலைத்துறை மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தகுமார் தலைமையில், நெடுஞ்சாலை துறையினர் வந்தனர். பின்னர் அவர்கள் கோயிலின் முகப்பு மண்டபத்தை கட்டர் இயந்திரங்களை கொண்டு அறுத்து இடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதை பார்த்ததும் பக்தர்கள் திரண்டுவந்ததால் பரபரப்பு நிலவியது. மேலும் கோயிலுக்கு அருகே உள்ள வேப்பமரம், அரச மரம் ஆகியவற்றை வேருடன் பிடுங்கி மறு நடவு செய்யவும் நெடுஞ்சாலையினர் திட்டமிட்டுள்ளனர். செங்குன்றம் காவல் உதவி ஆணையர் ராஜா ராபர்ட் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ‘’கோயிலை கட்டுவதற்கான மாற்று ஏற்பாடுகள் எதுவும் செய்துதராமல் மெத்தனப் போக்குடன் அதிகாரிகள் செயல்படுகின்றனர்’ என்று கிராம மக்கள் தெரிவித்தனர். கோயில் மண்டபம் இடிக்கப்படுவது பார்த்து பெண் பக்தர்கள் கண்ணீர் வடித்தனர்.
The post சோழவரம் அருகே அம்மன் கோயில் மண்டபம் இடிப்பு: போலீஸ் குவிப்பால் பரபரப்பு appeared first on Dinakaran.