இதனிடையே பிரபல சீனியர் நடிகர் ஆன சித்திக் மீது துணை நடிகை ஒருவர், அவர் தன்னை ஒரு ஓட்டலுக்கு வரவழைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக திருவனந்தபுரம் மியூசியம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பான வழக்கில் கேரள ஐகோர்ட்டு சித்திக்கிற்கு ஜாமீன் மறுத்து விட்ட நிலையில் தான் கைதாவதில் இருந்து தப்பிக்க சில நாட்கள் தலைமறைவான சித்திக், சுப்ரீம்கோர்ட்டை நாடி இடைக்கால ஜாமீன் பெற்றார். அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியதுடன், காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் சுப்ரீம்கோர்ட்டு அறிவுறுத்தியது. ஆனால் விசாரணையில் அவர் சரியான தகவல்களை தராமல் புறக்கணிப்பதாகவும், அலட்சியம் காட்டுவதாகவும் அதனால் அவரை கைது செய்து விசாரிக்க முடிவு எடுத்த காவல்துறை அவருக்கு வழங்கப்பட்ட இடைகால ஜாமீனை ரத்து செய்ய சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் மலையாள நடிகர் சித்திக்கிற்கு, சுப்ரீம்கோர்ட்டு முன்ஜாமீன் வழங்கி உள்ளது. பாதிக்கப்பட்டதாக கூறுபவர் 8 ஆண்டுகளாக புகார் அளிக்காமல் இருந்தது ஏன் என்றும், பேஸ்புக்கில் பதிவிட உள்ள தைரியம் காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளிக்க இல்லையா என்றும் சுப்ரீம்கோர்ட்டு கேள்வி எழுப்பியது. மேலும் விசாரணை நீதிமன்றத்தில் நடிகர் சித்திக் பாஸ்போர்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு முன்ஜாமீன் வழங்கப்படுவதாக சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்துள்ளது.
The post பாலியல் வன்கொடுமை வழக்கில் மலையாள நடிகர் சித்திக்கிற்கு முன்ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.