ஆட்டை வேட்டையாடிய மர்ம விலங்கு; அருமனை அருகே புலி நடமாட்டமா?.. கிராம மக்கள் பீதி


அருமனை: அருமனையில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வண்ணாத்திப்பாறை. இது வனப்பகுதி நிறைந்த கிராமம் ஆகும். இந்த கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். விவசாயி. தனது வீட்டில் பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று வழக்கம்போல் ஆடுகள் மேய்ச்சல் முடிந்து வந்தது. உடனே பட்டியில் அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்றார். அப்போது நள்ளிரவில் பட்டியில் இருந்து திடீரென நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. இதனால் விஜயகுமார் வெளியில் வந்து பார்த்துள்ளார். அப்போது பட்டியில் இருந்த ஒரு ஆட்டின் பாதி உடலை மர்மவிலங்கு தின்று விட்டு போட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து களியல் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியது: கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வண்ணாத்திப்பாறை பகுதியில் ஆடு, கால் நடைகளை புலி ஒன்று தொடர்ந்து வேட்டையாடி வந்தது. பின்னர் வனத்துறையினர் கூண்டு வைத்து அந்த புலியை பிடித்து கொண்டு சென்றனர். அதன் பின்னர் தற்போது மர்மவிலங்கின் நடமாட்டம் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்துகாணி அரசு பள்ளி பகுதியில் 2 நாய்களை மர்மவிலங்கு கவ்வி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. புலியின் நடமாட்டம் உள்ளதாக கிராம மக்கள் பயப்படுகின்றனர். எனவே கால்நடைகளை வேட்டையாடி வரும் மர்மவிலங்கை வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பிடிக்க வேண்டும் என்றனர்.

The post ஆட்டை வேட்டையாடிய மர்ம விலங்கு; அருமனை அருகே புலி நடமாட்டமா?.. கிராம மக்கள் பீதி appeared first on Dinakaran.

Related Stories: