ரூ96.5 லட்சம் ஆன்லைன் மோசடியில் மேலும் 2 பேர் அதிரடி கைது


மதுரை: சர்வதேச பங்குச்சந்தையில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால் அதிக வருமானம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி, ரூ.96.5 லட்சம் மோசடி செய்த வழக்கில், மேலும் இருவரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை, ஆன்லைன் பங்குசந்தையில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என, வாட்ஸ்அப் மூலமாக சிலர் தொடர்பு கொண்டுள்ளனர். இதனை நம்பிய அந்த நபரும் அவர்களிடம் ரூ.96,57,953ஐ பல்வேறு வங்கி கணக்குகள் மூலமாக அனுப்பி வைத்தார். ஆனால், அதன்பிறகு அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

இதனால் தான் மோசடி செய்யப்பட்டடதை உணர்ந்த அந்த நபர், இது குறித்து மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். மேலும், ஆன்லைனில் அனுப்பிய பணம் பல்வேறு வங்கி கணக்குகளிலிருந்தது. அவற்றில் இருந்த இருப்பு பணம் ரூ.38,28,000 முடக்கப்பட்டது. மேலும், இந்த வங்கி கணக்குகள் உதவியுடன் போலீசார் புலன் விசாரணை செய்தனர். அப்போது, அதில் ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்கை மட்டுமே மோசடி ஆசாமிகள் பயன்படுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து மோசடி ஆசாமிகள் சீனிமுகமது, இப்ராகிம், முகமது சபீர், முகமது ரியாஸ், முகமது அசாருதீன் மற்றும் முகமது மர்ஜீக் ஆகிய 6 பேரை ஏற்கனவே கடந்த 12ம் தேதி போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் அளித்த தகவலின் பேரில், இவ்வழக்கில் தொடர்புடைய மதுரையை சேர்ந்த அப்துல்ரகுமான், சுல்தான் அப்துல் காதர் ஆகியோரை போலீசார் தற்போது கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குற்றச்செயலுக்கு பயன்படுத்திய செல்போன்கள், சிம்கார்டுகள், வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் ஏடிஎம் கார்டுகள், பாஸ்போர்ட், பணம் எண்ணும் இயந்திரம் மற்றும் பதுக்கி வைத்திருந்த பணம் ரூ.3.25 லட்சம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

The post ரூ96.5 லட்சம் ஆன்லைன் மோசடியில் மேலும் 2 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Related Stories: