இன்ஸ்டாகிராமில் சிறுமிகளை காதல் வலையில் வீழ்த்தி நகை, பணம் பறித்த சிறுவன் கைது: சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது அம்பலம்

பெரம்பூர்: செல்போன் பயன்பாடு வந்த பிறகு சமூக வலைதளங்களை இளைஞர்கள் குறிப்பாக பள்ளி மாணவ, மாணவியர் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். எனவே, தொடர்ச்சியாக சமூக வலைதளங்களை பயன்படுத்தும் மாணவர்களை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், பெற்றோர் இந்த விஷயத்தில் அலட்சியமாக இருப்பதால், பலர் இளம் வயதிலேயே தவறான பாதைக்கு சென்று, பாதிக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.

அந்த வகையில் 17 வயது சிறுவன் ஒருவன், இன்ஸ்டாகிராமில் 3க்கும் மேற்பட்ட சிறுமிகளை காதல் வலையில் வீழ்த்தி, பணப்பறிப்பில் ஈடுபட்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை திரு.வி.க.நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமியிடம், இன்ஸ்டாகிராம் மூலம் 17 வயது சிறுவன் நட்பாக பழகி வந்துள்ளார்.

பின்னர், சிறுமியை காதல் வலையில் வீழ்த்திய சிறுவன், சில நாட்கள் கழித்து, தனது அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் சிறுமியிடம் கூறியுள்ளார். இதனால், சிறுமி தனது வீட்டில் இருந்த 5 சவரன் நகை மற்றும் 75 ஆயிரத்தை யாருக்கும் தெரியாமல் கொண்டு வந்து, சிறுவனிடம் கொடுத்துள்ளார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு மீண்டும் சிறுமியை தொடர்பு கொண்ட அந்த சிறுவன், ‘‘அம்மாவின் மருத்துவ செலவிற்கு பணம் வேண்டும்,’’ எனக் கூறியுள்ளார்.

அதற்கு சிறுமி, என்னிடம் பணம் இல்லை, என கூறியுள்ளார். ஆனால், அந்த சிறுவன் எப்படியாவது பணம் தயார் செய்து கொடு, என கேட்டுள்ளார். இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சிறுவன், ‘‘நான் கேட்கும் பணத்தை கொடுக்கவில்லை என்றால், நாம் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவேன், என மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி நடந்தவற்றை தனது தந்தையிடம் கூறியுள்ளார்.

சிறுமியின் தந்தை இதுகுறித்து திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் கிருபாநிதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியதில், அம்பத்தூர் சத்தியபுரம் முதல் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், சிறுமியை ஏமாற்றியது தெரிய வந்தது. அந்த சிறுவனை நேற்று போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில், 10ம் வகுப்பு வரை படித்த இந்த சிறுவன் தற்போது, டுடோரியலில் படித்து வருவதும், இவரது தந்தை கருத்து வேறுபாடு காரணமாக தாயை விட்டு பிரிந்து சென்ற நிலையில், தனது தாயுடன் சிறுவன் வசித்து வருவது தெரியவந்தது.

மேலும், அவரது செல்போனை ஆய்வு செய்ததில் இன்ஸ்டாகிராமில் அவர் பல சிறுமிகளுடன் பழகி வந்ததும், ஏற்கனவே இதுபோல் 3 சிறுமிகளை இவர் காதல் வலையில் வீழ்த்தி பணம், நகைகளை பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை வாங்கியதும் தெரியவந்தது. இவரால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் இதுபற்றி போலீசில் புகார் கொடுத்தால் தங்களது வாழ்க்கை பாதிக்கப்படுமோ என்று அஞ்சி புகார் தரவில்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து சிறுவன் மீது வழக்கு பதிவு செய்து, சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

The post இன்ஸ்டாகிராமில் சிறுமிகளை காதல் வலையில் வீழ்த்தி நகை, பணம் பறித்த சிறுவன் கைது: சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது அம்பலம் appeared first on Dinakaran.

Related Stories: