தமிழகத்தில் முக்கிய நகரங்களுக்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி சென்னையில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர் செல்ல விக்கிரவாண்டி வரை நான்கு வழிச்சாலை உள்ளது.எனவே அதில் இருந்து தஞ்சாவூர் வரையிலான 165 கிலோ மீட்டர் தூரமுள்ள சாலை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 4 வழிச்சாலையாக கடந்த 2006ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து, இந்த சாலையை 4 வழிச்சாலையாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து 2010ம் ஆண்டில் அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு கடந்த 2015ம் ஆண்டு விக்கிரவாண்டி-தஞ்சாவூர் இடையேயுள்ள சாலையையும், வழியில் உள்ள பாலங்களையும் புதிதாக அமைக்க ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுவதாலும், நேரம் வீணாவதை கருத்தில் கொண்டும் விபத்தில்லா சாலைகளை அமைக்கும் வகையிலும் ஒன்றிய அரசு கடந்த 2017ம் ஆண்டு மேலும் ரூ.3,517 கோடி ஒதுக்கீடு செய்தது.
இதையடுத்து விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் வரை 4 வழிச்சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு சாலை பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் 3 பிரிவுகளாக பிரித்து பணிகள் தொடங்கப்பட்டன. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் தனியார் ஒப்பந்த நிறுவனம் (ரிலையன்ஸ்) மூலம் விக்கிரவாண்டியில் இருந்து சேத்தியாத்தோப்பு பின்னலூர் வரை 66 கி.மீ. தூரத்துக்கு ஒரு பிரிவாகவும், சேத்தியாத்தோப்பில் இருந்து தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் வரை 51 கி.மீ. தூரத்துக்கு 2வது பிரிவாகவும், சோழபுரத்தில் இருந்து தஞ்சாவூர் வரை 48 கி.மீ. தூரத்துக்கு 3வது பிரிவாகவும் பணிகள் ஒதுக்கப்பட்டன.
இதற்கான சாலை விரிவாக்க பணிகள் கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. விக்கிரவாண்டி-தஞ்சாவூர் இடையே 4 வழிச்சாலை அமையும் இடங்கள் வழியாக வெள்ளியனூர், பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சேத்தியாத்தோப்பு, அணைக்கரை, திருப்பனந்தாள், கும்பகோணம், பாபநாசம் ஆகிய முக்கிய இடங்கள் உள்ளன. இந்த பகுதிகள் வழியாக ஆறுகள் செல்லும் இடங்களில் மட்டும் 102 இடங்களிலும், சாலை பகுதிகளில் 70 இடங்களிலும் பாலங்கள் அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதுதவிர 5 இடங்களில் ரயில்வே மேம்பாலங்களும், 2 இடங்களில் புறவழிச்சாலைகளும், 3 இடங்களில் சுங்கச்சாவடிகளும் அமைக்கப்படுகின்றன. இந்த சாலை பணிகளை 2020ம் ஆண்டு முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நகாய்) ஒப்பந்தம் செய்தது.
ஆனால் இந்த 4 வழிச்சாலை பணிகள் மிகவும் மந்தமாக ஆமை வேகத்திலேயே நடந்து வருகிறது. குறிப்பாக விக்கிரவாண்டி-சேத்தியாத்தோப்பு வரை மும்பையை சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்த நிலையில் இயந்திரம், ஆட்கள் தட்டுப்பாடு உள்ளிட்ட ஒரு சில காரணங்களால் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்காமல் விக்கிரவாண்டியில் இருந்து சேத்தியாத்தோப்பு பின்னலூர் வரை 4 வழிச்சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பாலம் கட்டும் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இரு வழிக்காக அமைக்கப்பட்ட சாலைகள் ஜல்லிகள் பெயர்ந்து காணப்படுகின்றன.ஆனால் சேத்தியாத்தோப்பு-சோழபுரம் வரை 51 கி.மீ. தூரத்துக்கும், சோழபுரத்தில் இருந்து தஞ்சாவூர் வரை 48 கி.மீ. தூரத்துக்கும் ஒப்பந்தம் எடுத்த மற்ற 2 நிறுவனங்களும் குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகளை முடித்து சாலையை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால் நாட்டின் முக்கிய நிறுவனமான ரிலையன்ஸ் போட்ட ஒப்பந்த நிறுவனம் 47 சதவீத பணிகளை மட்டுமே மேற்கொண்டுள்ளது.
இதனால் சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டத்துக்கு செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகிவருகின்றனர். இதனிடையே கடந்த சிலமாதத்திற்கு முன் கும்பகோணத்துக்கு வருகை தந்த ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, தஞ்சாவூர், கும்பகோணம், சோழபுரம் வரை முடிக்கப்பட்ட நான்கு வழிச்சாலை பணிகளை ஆய்வு செய்தார். அப்போது, முடிக்கப்பட்ட பணிகள் தரமுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், விக்கிரவாண்டி-சேத்தியாத்தோப்பு வரையிலான பணிகளை மேற்கொள்ள ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஜனவரியில் இந்த பணிகள் தொடங்கி ஓராண்டுக்குள் முடிக்கப்படும் என்றும். அதுவரை தற்காலிகமாக சேதம் அடைந்த விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு இடையே பேட்ச் ஒர்க் பணிகளுக்காக ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெறும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி கடந்த இந்த பணிகளை ஒப்பந்த நிறுவனம் மேற்கொண்டது. ஆனால் பல இடங்களில் பேட்ச் வொர்க் சரியாக போடாமல் பணிகளை முடித்து விட்டதாக தெரிவித்துள்ளது. கோலியனூர், வாணியம்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் பேட்ச் ஒர்க் பணிகள் போடப்படாமல் ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டு பல்லாங்குழியாக சாலைகள் காணப்படுகின்றன. தற்போது பெய்து வரும் மழையில் குளம்போல் தண்ணீர் தேங்கி நின்று வாகன ஓட்டிகள் யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பேட்ச்ஒர்க்கிற்கு ரூ 7 கோடி நிதி ஒதுக்கீடு செய்த நிலையில் அதனை ஒப்பந்த நிறுவனம் ஸ்வாகா செய்து விட்டதாகவும் ஒன்றிய அரசு மீது மீண்டும் பொதுமக்கள், வாகனஓட்டுகள் அதிருப்தியடைந்துள்ளனர். எனவே விடுபட்ட இடங்களில் பேட்ச்வொர்க் பணிகளை மேற்கொண்டு வாகன ஓட்டிகள் தற்காலிகமாக சென்று வர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதனிடையே ஒப்பந்த நிறுவனம் தரப்பில் ஒதுக்கப்பட்ட ரூ.7 கோடியில் பணிகளை முடித்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அடுத்த கட்டமாக ஜனவரி முதல் முழுமையாக சாலை பணிகள் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
The post விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு இடையே 65 கி.மீ. தூரம் பேட்ச்ஒர்க் பணிகளை பாதியோடு முடித்த ஒப்பந்த நிறுவனம்: ரூ.7 கோடி ஸ்வாகா, ஒன்றிய அரசு மீது அதிருப்தி appeared first on Dinakaran.