திருவெறும்பூர், நவ.17: திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலைக்கு சொந்தமான ஆற்றுப்படுகை மற்றும் சாலை ஓரம் உள்ள ஆக்கிரமிப்புகளை முன்னறிவிப்பு இல்லாமல் அகற்ற முயன்ற துப்பாக்கி தொழிற்சாலை நிர்வாகத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பணி நிறுத்தப்பட்டது. திருவெறும்பூர் அருகே மத்திய படைகலன் தொழிற்சாலைகளான துப்பாக்கி தொழிற்சாலை, எச் இ பி எஃப் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைகளுக்கு சொந்தமாக பல நூறு ஏக்கர் நிலங்களும் உள்ளது.மேலும் இந்த தொழிற்சாலைகளில் பலநூற்றுக்கணக்கானோர் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் துப்பாக்கி தொழிற்சாலை நிர்வாகம் நேற்று எந்தவித முன்னறிவிப்பும் இன்றி துப்பாக்கி தொழிற்சாலைக்கு சொந்தமான ஆற்று படுகை மற்றும் சாலை ஓரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு முற்பட்டது. அதற்கு குண்டூர், அயன் புத்தூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தடுத்து நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்ததால் துப்பாக்கி தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கும் பொது மக்களுடைய வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தற்காலிகமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை துப்பாக்கித் தொழிற்சாலை நிர்வாகம் நிறுத்தியது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
The post துப்பாக்கி தொழிற்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்ற முயற்சி மக்கள் எதிர்ப்பால் பரபரப்பு appeared first on Dinakaran.