இந்நிலையில் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள தண்டனை கைதிகள், விசாரணை கைதிகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்களும், பெரும் ரவுடிகளும் அடக்கம். தற்போது வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றங்களில் ஆஜர்படுத்த ஒவ்வொரு முறையும் கைதிகளை பலத்த பாதுகாப்புடன் சிறைச்சாலைகளில் இருந்து தொலைவில் உள்ள நீதிமன்றங்களுக்கு அழைத்து சென்று மீண்டும் அவர்களை அழைத்து வர வேண்டியுள்ளது. இதற்காக ஏற்படும் எரிபொருள், போலீசாருக்கான பயணப்படி, கைதிகள், போலீசாருக்கான உணவு என பல்வேறு தேவையற்ற செலவினங்கள் அரசுக்கு சுமையை ஏற்படுத்தி வருகிறது.
மேலும், கைதிகள் வழியில் தப்பிச் செல்லும் சம்பவங்களும் நடக்கிறது. நீதிமன்றங்களில் கைதிகளை அழைத்து செல்வதற்காக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான போலீசார் பணிக்கு திருப்பிவிடப்படுவதும் காவல்துறைக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. தற்போது குறிப்பிட்ட சில கைதிகளிடம் சிறைச்சாலைகளிலேயே வீடியோ கான்பரன்சிங் முறையிலான விசாரணை நடத்தப்படுகிறது. இது சாதாரணமாக அலுவலகங்களில் நடக்கும் ‘கூகுள் மீட்’ என்ற அடிப்படையில் நடக்கிறது.
இத்தகைய விசாரணையிலும் வழக்கு ஒத்திவைப்பு, முறையிடல் மட்டுமே செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. இச்சிக்கல்களை தீர்க்கவும், கைதிகளை வெளியூர் நீதிமன்றங்களுக்கு அழைத்து செல்வதால் ஏற்படும் அநாவசிய செலவினங்களை தவிர்க்கவும் தமிழகத்தின் மத்திய, மாவட்ட, பார்ஸ்டல், பெண்கள் தனிச்சிறை என 29 சிறைச்சாலைகள், சிறைத்துறை தலைமையகம் ஆகியவற்றில் வீடியோ கான்பரன்சிங் முறையில் நீதிமன்ற முழு விசாரணையையும் மேற்கொள்ள 160 ஸ்டூடியோ கேபின்கள் அமைக்கப்படுகின்றன.
இதில் வேலூர் மத்திய சிறைக்கு 10 கேபின்களும், பெண்கள் தனிச்சிறைக்கு 3 கேபின்களும் அமைக்கப்படுகின்றன. இதற்கான பணியை எல்காட் நிறுவனம் மேற்கொள்கிறது. இதற்காக தமிழக சிறைத்துறை ரூ.6 கோடியே 46 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளதாகவும், ஸ்டூடியோ கேபின்கள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post கைதிகளிடம் வீடியோ கான்பரன்சில் விசாரணைக்காக சிறைகளில் 160 ஸ்டூடியோ கேபின் அமைக்க ரூ.6.46 கோடி நிதி ஒதுக்கீடு: சிறைத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.