திருவண்ணாமலை: பிரசித்தி பெற்ற ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு கோ பூஜையுடன் நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், பவுர்ணமி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று அதிகாலை 5.40 மணிக்கு தொடங்கி, இன்று அதிகாலை 3.33 மணிக்கு நிறைவடைந்தது. எனவே, நேற்று அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். வெயில் தணிந்து மழை மேகம் சூழ்ந்த இதமான நிலை அமைந்திருந்ததால், பகலிலும் கிரிவல பக்தர்கள் கூட்டம் அதிகரித்திருந்தது. மாலை 4 மணிக்கு பிறகு கிரிவல பக்தர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்காக உயர்ந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு திரண்டதால், கோயில் வெளி பிரகாரத்தில் மாட வீதி வரை சுமார் ஒரு கிமீ தூரம் தரிசன வரிசை நீண்டிருந்தது. இதனால் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.
The post திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் appeared first on Dinakaran.