கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் அன்னாபிஷேகம்: 100 மூட்டை அரிசி சாதம் லிங்கத்துக்கு சாற்றி வழிபாடு

அரியலூர்: கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் இன்று நடந்த அன்னாபிஷேகத்தில் 100 மூட்டை அரிசி சாதத்தை லிங்கத்துக்கு சாற்றி வழிபாடு நடந்தது. உலகில் உள்ள ஒவ்ெவாரு உயிரும் பசியாற உணவை அளிப்பவர் ஈசன். இதற்கு நன்றி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தில் சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் நடைபெறும். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் பதிமூன்றரை அடி உயரம், 62 அடி சுற்றளவு கொண்ட லிங்கம் உள்ளது. இது தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கமாகும். கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் ஒவ்ெவாரு ஆண்டும் ஐப்பசி பவுர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெறும். லிங்கத்துக்கு 100 மூட்டை அரிசியால் 5 நீராவி கொதிகலன்களை கொண்டு சாதம் சமைத்து சாத்தப்படும்.

அவ்வாறு சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறும் என்பதும், கோடிக்கணக்கான லிங்கத்தை பக்தர்கள் ஒரே நேரத்தில் நேரில் தரிசிப்பதாக ஐதீகம். இந்தநிலையில் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் இந்தாண்டு ஐப்பசி மாத அன்னாபிஷேகம் இன்று (15ம் தேதி) நடந்தது. காலை 9 மணி முதல் 100 மூட்டை அரிசியால் சாதம் சமைத்து லிங்கத்தின் மேல் சாத்தப்பட்டது. மாலை 6 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. இரவு 8 மணிக்கு லிங்கத்தின் மேல் உள்ள சாதங்கள் பக்தர்களுக்கு உணவாக வழங்கப்படும். பக்தர்களுக்கு வழங்கியதுபோக மீதம் உள்ள சாதம் அருகில் உள்ள ஆறு, ஏரி குளங்களில் மீன்களுக்கு உணவாக அளிக்கப்படும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இதேபோல் தஞ்சை பெரிய கோயில் உள்பட தமிழகத்தில் உள்ள பல சிவன் கோயில்களில் இன்று அன்னாபிஷேகம் நடந்தது.

The post கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் அன்னாபிஷேகம்: 100 மூட்டை அரிசி சாதம் லிங்கத்துக்கு சாற்றி வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: