×

திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழையால் ஒத்தி வைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு தொடங்கியது * வரும் 10ம் தேதி வரை நடைபெறுகிறது * முதன்மைக் கல்வி அலுவலர் ஆய்வு

திருவண்ணாமலை, ஜன.3: திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழையால் ஒத்தி வைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வு நேற்று தொடங்கியது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மாதம் பெஞ்சல் புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. புயல் ஓய்ந்த பிறகும், கடந்த மாதம் மாவட்டம் முழுவதும் மழை நீடித்தது. எனவே, கடந்த மாதம் 9ம் தேதி தொடங்கி நடைபெறுவதாக இருந்த அரையாண்டு பொதுத்தேர்வு திருவண்ணாமலை, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஒத்தி வைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. மேலும், அரையாண்டு தேர்வு நடைபெறாத நிலையிலும், திட்டமிட்டபடி மாநிலம் முழுவதும் அறிவிக்கப்பட்ட தேர்வு விடுமுறை இந்த 3 மாவட்டங்களுக்கும் பொருந்தும் எனவும், விடுமுறைக்கு பிறகு அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நேற்று அரையாண்டுத் தேர்வு நடந்தது. அதையொட்டி, சம்பந்தப்பட்ட 3 மாவட்டங்களுக்கு மட்டும் தனியாக வினாத்தாள் தயாரிக்கப்பட்டது. நேற்று தொடங்கிய அரையாண்டுத் தேர்வு வரும் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற அரையாண்டு தேர்வை முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்தனர். இதுகுறித்து, முதன்மைக் கல்வி அலுவலர் கூறுகையில், கனமழையால் ஒத்தி வைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வு தற்போது நடக்கிறது. தேர்வு விடுமுறை நாட்கள் முன்கூட்டியே அமைந்தது, மாணவர்களுக்கு படிப்பதற்கான வாய்ப்பாக அமைந்தது. இந்த ஆண்டு பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மேற்கொண்டிருக்கிறோம் என்றார்.

The post திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழையால் ஒத்தி வைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு தொடங்கியது * வரும் 10ம் தேதி வரை நடைபெறுகிறது * முதன்மைக் கல்வி அலுவலர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Tiruvannamalai district ,Cyclone Penjal ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலான...