- அமைச்சர்
- சென்டில்பலாஜி
- அனைத்து மாநில மற்றும் மத்திய பிரதேசங்களின் எரிசக்தித் துறை
- தில்லி
- மின்சாரம், விலக்கு மற்றும் தயாரிப்பு திணைக்களம்
- அனைத்து மாநில மற்றும் மத்திய பிரதேசங்களின் எரிசக்தித் துறை
- புது தில்லி
- ஐரோப்பிய ஒன்றிய
டெல்லி: புது டெல்லியில் நடைபெற்ற அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் எரிசக்தித் துறை அமைச்சர்கள் மாநாட்டில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை செந்தில்பாலாஜி பங்கேற்று உரை நிகழ்த்தினார்.
ஒன்றிய அரசின் மின்சாரம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் தலைமையில் இன்று (12.11.2024) புது தில்லியில் நடைபெற்ற அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் எரிசக்தித் துறை அமைச்சர்கள் மாநாட்டில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை வி செந்தில்பாலாஜி தமிழ்நாடு அரசின் சார்பாக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். இந்த கூட்டத்தில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் க. நந்தகுமார், உடன் பங்கேற்றார்.
இம்மாநாட்டில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை வி செந்தில்பாலாஜி ஆற்றிய உரை பின்வருமாறு: “ஒன்றிய மின்சாரம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள்துறை அமைச்சர் மனோகர் லால் அவர்களே, ஒன்றிய மின்சாரத்துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் அவர்களே, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து வருகை புரிந்துள்ள அமைச்சர்களே, சிறப்புப் பிரதிநிதிகளே, ஒன்றிய மின்சாரத்துறை மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளின் மதிப்பிற்குரிய செயலாளர்களே மற்றும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் அரசுத்துறை பிரதிநிதிகளே உங்கள் அனைவருக்கும் எனது பணிவார்ந்த வணக்கங்கள்.
மகத்தான இந்த மாநாட்டில் தமிழ்நாடு சார்பாக கலந்து கொள்ள எனக்கு வாய்ப்பளித்த தமிழ்நாடு முதலமைச்சர், மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சிறப்பு வாய்ந்த எரிசக்தித்துறை மாநாட்டில் கலந்து கொண்டு, எரிசக்தித் துறை தொடர்பான தமிழ்நாட்டின் தேவைகள் மற்றும் கருத்துக்களை முன்வைக்க இந்த அரிய வாய்ப்பு கிடைத்ததில், நான் பெருமை கொள்கிறேன்.
இந்த அருமையான தருணத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அயராத, ஓய்வறியா உழைப்பினால், தமிழ்நாடு மாநிலமானது இன்று இந்திய அளவில் சிறப்பாக நிர்வகிக்கப்படும் மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது என்பதைப் பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன். இந்த பொன்னான தருணத்தில், எரிசக்த்தித்துறை சார்ந்த சில முக்கியமான கருத்துக்களைத் தங்களது கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
1. மின் விநியோக நிறுவனங்களின் நிலைத்தன்மை:
அ. மின் விநியோக நிறுவனத்தின் மறுசீரமைப்பு:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் செயல்பாட்டு மற்றும் நிருவாகத் திறனை மேம்படுத்தவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிக்கவும், தமிழ்நாடு அரசு, மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை, தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம் (TNPGCL) மற்றும் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) என பிரித்துள்ளது. மேலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்திச் செயல்பாடுகளை நிருவகிக்க தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகம் (TNGECL) உருவாக்கப்பட்டுள்ளது.
ஆ. சராசரி விற்பனை விலைக்கும் சராசரி பெறப்படும் விலைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைத்தல்:
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், 2022-2023 ஆம் ஆண்டு முதல் 5 ஆண்டு கட்டண ஆணையை அறிவித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக, சுமார் 37,000 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மின்சாரத்துறை நிதிச் சவால்களை கொண்டிருந்தபோதிலும், தமிழ்நாட்டு மக்களுக்குத் தரமான மின்சாரத்தைக் குறைந்த விலையில் விநியோகம் செய்ய வேண்டுமென்ற தமிழ்நாடு அரசின் உறுதிப்பாட்டை இது எடுத்துக்காட்டுகிறது.
மேற்கூறிய முயற்சிகளின் காரணமாக, சராசரி விற்பனை விலைக்கும் சராசரி பெறப்படும் விலைக்கும் இடையே உள்ள இடைவெளி, இந்த ஆண்டிற்கு ரூ. 0.49 என மதிப்பிடப்பட்டுள்ளது, இது முந்தைய ஆண்டின் ரூ. 1.24 என்ற அளவில் இருந்து குறைந்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் சராசரி விற்பனை விலைக்கும் சராசரி பெறப்படும் விலைக்கும் இடையே உள்ள இடைவெளி ரூ 0.02 என மிகக் குறைவான அளவிலேயே உள்ளது. 2023-24ஆம் ஆண்டின் செலவுகளுக்கு பிந்தைய வருவாய் 15,843 கோடி ரூபாய் என எதிர்பார்க்கப்பட்டாலும், முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட கணிசமான வட்டிச் சுமையால் நிறுவனம் தொடர்ந்து இழப்புகளைச் சந்தித்து வருகிறது.
இ. வட்டிச் செலவினைக் குறைத்தல்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் ஆண்டு வட்டிச் சுமை சுமார் 16,000 கோடி ரூபாயாக இருந்தது. தமிழ்நாடு அரசின் தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக, ஆண்டு வட்டி விகிதம் 10.5% அளவிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. மாநில மின் நிறுவனங்களின் நிதி மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதில் தமிழ்நாடு காட்டியுள்ள அர்ப்பணிப்பைக் கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசின் நிதி நிறுவனங்களான REC மற்றும் PFC ஆகியவற்றின் வட்டி விகிதங்களை 8% ஆகக் குறைத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
2. மறுசீரமைக்கப்பட்ட விநியோக அமைப்பிற்கான திட்டம் (RDSS):
அ. இழப்பு குறைப்பு பணிகள்:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறந்த தலைமையின் கீழ், மின்சாரத் துறையில் பல சிறப்பு முயற்சிகள் செயல்படுத்தப்பட்டு வருவதன் காரணமாக தமிழ்நாட்டின் மின் விநியோக வலையமைப்பு, 11.26% AT&C இழப்புகளுடன் இந்தியாவின் சிறந்த வலையமைப்புகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த முன்னேற்றத்தைத் தொடர்ந்து, RDSS திட்டத்தின் கீழ் இழப்பு குறைப்புத் திட்டப் பணிகள் 8,933 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இப்பணிகள் உரிய காலத்திற்குள் நிறைவு பெறும் வண்ணம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், 2024 ஜூன் மாதத்தில், ஒன்றிய மின்துறை அமைச்சகம் பிரதமரின் சூர்ய கர் முஃப்த் பிஜ்லி யோஜனா (PM-SURYAGHAR) திட்டத்தின் கீழ் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடக் கூடுதல் நிபந்தனையை அறிமுகப்படுத்தியது. இந்த ஒப்பந்தம், கண்காணிப்புக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய வேண்டும் என்று கூறுகிறதே தவிர இலக்குகள் குறித்து தெளிவாக வரையறுக்கப்படவில்லை. இவ்வாறான புதிய நிபந்தனைகள் திட்டத்தின் செயல்திறனை பாதிக்கும் என்பதால், புதிய நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்படக்கூடாது என இத்தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன். மேலும், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட வேண்டியிருந்தால், இலக்குகள் நடைமுறைக்கு ஏற்றதாகவும், அடையக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதால், தமிழ்நாடு அரசின் ஒப்புதலுடன் இலக்குகள் இறுதி செய்யப்பட கேட்டுக்கொள்கிறேன்.
ஆ. மின் கட்டமைப்புகளை நவீனமயமாக்கும் பணிகள்:
புதிய துணை மின் நிலையங்களை நிறுவுதல் மற்றும் மேம்பாட்டு பணிகள் உட்பட மின் கட்டமைப்பு நவீனமயமாக்கலுக்காக 3,246 கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட கருத்துரு ஒன்றிய மின்சார அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மாநிலத்தின் வேகமான பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிகரித்து வரும் மின் தேவைகளுக்கேற்ப விநியோக அமைப்பை வலுப்படுத்த இந்தக் கருத்துரு மீது விரைவாக ஒப்புதல் வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
3. வளப் போதுமை:
அ. உரிய நேர முதலீடுகள் மற்றும் திறன் கூட்டல் மூலம் 24×7 மின்சார வழங்கல் உறுதி செய்தல்:
தமிழ்நாடு எரிசக்த்தித் துறை வரலாற்றில் ஒரு மைல்கல் சாதனையாக, 800 மெகாவாட் (MW) திறன் கொண்ட வடசென்னை அனல் மின் திட்டம் மூன்றாம் கட்டம், தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களால் கடந்த 07.03.2024 அன்று திறந்து வைக்கப்பட்டது.
இதுத்தவிர, கூடுதலாக 2640 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் உற்பத்தி திட்டங்களும், 520 மெகாவாட் திறன் கொண்ட குந்தா நீர்மின் சேமிப்பு திட்டமும் தற்போது கட்டுமானத்தில் உள்ளன, விரைவில்இயக்கத்திற்கு கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன்.
ஆ. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (RE):
தமிழ்நாடு 21,146 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவப்பட்ட திறனுடன் இந்தியாவில் 3வது இடத்தில் உள்ளது. காற்று மற்றும் சூரிய உச்சக் காலங்களில் அதிகப்படியான புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் உட்கொள்ளலை அதிகரிக்க மாநிலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
– சூரிய பூங்காக்கள்:
நிகர-பூஜ்ஜிய இலக்கை அடைய தமிழ்நாடு அரசு பல்வேறு மாவட்டங்களில் 6000 மெகாவாட் சூரிய மின் பூங்காக்களை நிறுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
– நீர்மின் சேமிப்பு திட்டங்கள்:
மொத்தம் 14,500 மெகாவாட் திறன் கொண்ட 15 நீர்மின் சேமிப்பு திட்டங்கள் மேம்பாட்டிற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. 1000 மெகாவாட் திறன் கொண்ட மேல் பவானி நீர்மின் சேமிப்பு திட்டம் TNPGCL & NTPC இன் கூட்டு நிறுவனமான NTECL மூலம் மேற்கொள்ளப்படுகிறது. மீதமுள்ள 14 திட்டங்கள் பொது-தனியார் கூட்டாண்மை (PPP) முறையில் மேம்படுத்த முன்மொழியப்பட்டுள்ளன.
– SECI மூலமாக மின்கல எரிசக்தி சேமிப்பு அமைப்பு (BESS) நிறுவுதல்:
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் (TNPDCL) தமிழ்நாட்டில் 4000 MWh மின்கல எரிசக்தி சேமிப்பு அமைப்பு (BESS) திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகளை கட்டண அடிப்படையிலான போட்டி முறையில் கோர இந்திய சூரிய எரிசக்தி கழகத்திற்கு (SECI) அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாடு அரசு காற்று மற்றும் நீர்மின் திட்டங்களில் தனியார் துறை முதலீட்டை ஊக்குவிக்க “தமிழ்நாடு காற்றாலை திட்டங்களுக்கான மறுசக்தியளித்தல், புதுப்பித்தல் மற்றும் ஆயுள் நீட்டிப்புக் கொள்கை 2024”, “தமிழ்நாடு நீர்மின் சேமிப்பு கொள்கை (PSP) 2024”, மற்றும் “சிறு நீர்மின் திட்ட கொள்கை” ஆகியவற்றை வெளியிட்டுள்ளது.
இ. புதுப்பிக்கத்தக்க கொள்முதல் கடமை (RPO):
சமீபத்தில், ஒன்றிய அரசின் மின்சார அமைச்சகம் 20.10.2023 தேதியிட்ட உத்தரவில், புதுப்பிக்கத்தக்க கொள்முதல் கடமைக்கான RPO இலக்குகளை வெளியிட்டது. இந்த இலக்குகளை அடைவதில் மாநிலங்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்க, காற்று அல்லது நீர் போன்ற குறிப்பிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் வகைப்படுத்தாமல், ஒற்றை, ஒருங்கிணைந்த புதுப்பிக்கத்தக்க கொள்முதல் கடமையினை (RPO) செயல்படுத்தப்பட வேண்டும் என இவ்வேளையில் கேட்டுக்கொள்கிறேன்.
ஈ. கடலோரக் காற்றாலைகள்:
தமிழ்நாட்டின் கடலோரப் பகுதியில் 35 ஜிகாவாட் அளவுக்கு கடல் காற்றின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய இயலும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடலோர காற்றாலை மின்சாரத்தை வெளியேற்றுவதற்காக கடலோர துணை மின்நிலையம் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடல் கேபிள் / மின் பரிமாற்ற கம்பிகள் தமிழகத்திற்குள் மட்டுமே அமைக்கப்பட உள்ளது. NIWE, OWPD பிரதிநிதிகள் மற்றும் மாநில அரசுத் துறைகள் (தொழில்கள், மீன்வளம், எரிசக்தி மற்றும் நெடுஞ்சாலைகள் போன்றவை) தலைமையில் ஒரு கூட்டுச் செயற்குழு அமைக்கப்பட வேண்டும் என்று இவ்வேளையில் கேட்டுக்கொள்கிறேன். இதுத்தவிர, கடலோர காற்றாலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, செலவு மற்றும் வரி இழப்பை மிச்சப்படுத்த, மத்திய மின் இணைப்புக்கு பதிலாக, மாநில மின் வலையமைப்புகள் வாயிலாக தமிழ்நாடு வழியாக மட்டுமே வெளியேற்றப்பட வேண்டும் என்பதை இத்தருணத்தில் வலியுறுத்த விரும்புகிறேன்.
4. ரெய்கர் – புகளூர் – திருச்சூர் ±800 கிலோவோல்ட், HVDC மின் பரிமாற்ற தொடரமைப்பை மிகவும் இன்றியமையாத மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவித்து, தொடரமைப்பு கட்டணத்தை தேசிய அளவிலான அனைத்து பயனீட்டாளர்களுக்கும் பகிர்ந்தளிக்க கோருதல்:
தமிழ்நாடு முதலமைச்சர் , பிரதமருக்கு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில், ரெய்கர் – புகளூர் – திருச்சூர் HVDC மின் பரிமாற்ற தொடரமைப்பை தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி, அதன் கட்டணங்களை நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என ஒன்றிய மின்சக்தி அமைச்சகத்திற்கு, மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது. மாண்பமை உயர் நீதிமன்றங்களின் வழிகாட்டுதல்கள், மத்திய மின் பரிமாற்ற பயன்பாட்டு நிறுவனம் இந்தியா லிமிடெட் (CTUIL) மற்றும் ஒன்றிய மின்சார அமைச்சகத்தின் பரிந்துரைகள் ஆகியவற்றிற்கு மாறாக, மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் 30.10.2023 தேதியிட்ட ஆணை, தெற்கு பிராந்திய மின் விநியோக நிறுவனங்களின் மீது கட்டண சுமையை விதித்துள்ளது.
பிஸ்வநாத்-சரியாலி-ஆக்ரா மற்றும் முந்த்ரா-மொஹிந்த்ரா HVDC அமைப்புகள் போன்ற பிற தேசிய திட்டங்களுடன் ஒப்பிடுகையில், ரெய்கர்-புகளூர்-திருச்சூர் HVDC அமைப்பிற்கு எதிரான இந்த பாரபட்சமான நடவடிக்கை, தெற்கு மாநிலங்களின் நலனுக்கு உகந்ததல்ல. எனவே, இது குறித்து தமிழ்நாட்டின் கோரிக்கை நேர்மறையாகப் பரிசீலிக்க வேண்டும் என இத்தருணத்தில் வேண்டுகோள் விடுக்கிறேன்.
5. பசுமை ஹைட்ரஜன் / பசுமை அம்மோனியா திட்டங்களுக்கான பொது நெட்வொர்க் அணுகல் (GNA) வழங்குதல் மற்றும் மின் பரிமாற்ற கட்டணங்களுக்கான விலக்கு:
2029-30 ஆம் ஆண்டுக்குள் சுமார் 75,300 மெகாவாட் பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அம்மோனியா தொழில்துறை மின்சுமைகள் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளது. மத்திய மின் பரிமாற்ற பயன்பாட்டு நிறுவனம் இந்தியா லிமிடெட் (CTUIL), மின்சார சட்டத்திற்கு முரணாக, மாநில மின் விநியோக நிறுவனங்களின் ஒப்புதல் இல்லாமலேயே, அந்த உற்பத்தியாளர்களுக்கு நேரடியாக பொது வலையமைப்பு அணுகலை வழங்கி வருகிறது.
மேலும், ஒன்றிய மின்சார அமைச்சகம் முழு திறனுக்கும் மின் பரிமாற்ற கட்டணங்களை ரத்து செய்து, அனைத்து மின் விநியோக நிறுவனங்களிடமும், இறுதியில் இறுதி நுகர்வோரிடமும் சமூகமயமாக்க முன்மொழிந்துள்ளது. 2030ஆம் ஆண்டில் தொழில்துறை நுகர்வோரின் மதிப்பிடப்பட்ட மின் பரிமாற்ற கட்டண பொறுப்பு ஆண்டுக்கு சுமார் 42,270 கோடியாக ரூபாயாக இருக்கும், இது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு அல்லது அதற்கு மேலாகத் தொடரும். தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்தின் தொடர் கூடுதல் மின் பரிமாற்ற கட்டண பொறுப்பு ஆண்டுக்கு சுமார் 3,114 கோடி ரூபாயாக இருக்கும்.
எனவே, மின்சார சட்டம் 2003-ன் விதிகளின்படி, உற்பத்தியாளர்களுக்கான மின் பரிமாற்ற கட்டண விலக்கு திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும், அத்தகைய நுகர்வோருக்கு பொது வலையமைப்பு அணுகல் வழங்கப்பட வேண்டும் என்றும் இத்தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த மாநாட்டில், தமிழ்நாட்டின் எரிசக்தி வளர்ச்சிக்கான தேவைகள் மற்றும் முக்கிய அம்சங்கள் குறித்து முன்வைக்க எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய ஒன்றிய மின்சாரத் துறை அமைச்சருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் எரிசக்தித் துறையின் தொடர்ச்சியான வளர்ச்சிக்காக, இந்த அமர்வில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்களின் மீது விரைவான நடவடிக்கை எடுக்குமாறும் இந்த பொன்னான வேளையில் கேட்டு விடை பெறுகிறேன்” என தெரிவித்தார்.
The post டெல்லியில் நடைபெற்ற அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் எரிசக்தித் துறை அமைச்சர்கள் மாநாட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு appeared first on Dinakaran.