புதுடெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே 3ம் தேதி மெய்டீஸ் மற்றும் குகி பழங்குடியின மக்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு மாநிலம் முழுவதும் வன்முறைகள் நடந்தன. பல மாதங்கள் நீடித்த மோதல்களில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக அமைதி திரும்பி வந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் ஜிரிபாம் மாவட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்தது. ஒரு இளம் பெண் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். வீடுகள், வாகனங்களுக்கு ஒரு கும்பல் தீ வைத்து எரித்தது.
இம்பால் பள்ளத்தாக்கில் பல இடங்களில் 2 குழுக்களுக்கு இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தன. ஜிரிபாம் மாவட்டம்,போரோபெக்ரா போலீஸ் நிலையம், ஜகுரதோர் என்ற இடத்தில் உள்ள எல்லை பாதுகாப்பு படை(சிஆர்பிஎப்) முகாமிற்குள் நவீன ஆயுதங்களுடன் புகுந்த தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கி சண்டையில் 10 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர். தீவிரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.
இந்நிலையில்,மாநிலத்தில் மீண்டும் வன்முறை ஏற்பட்டு வருவதையடுத்து, கூடுதலாக 20 கம்பெனி ஒன்றிய பாதுகாப்பு படைகளை மணிப்பூருக்கு அனுப்புவதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதுகுறித்து வட்டாரங்கள் கூறுகையில்,‘‘ பாதுகாப்பு படை வீரர்களை உடனடியாக விமானத்தில் அனுப்புவதற்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலத்தில் ஏற்கனவே 198 கம்பெனிகள் கொண்ட துணை ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். தற்போது 20 கம்பெனி துணை ராணுவ படை வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.இதில் 15 கம்பெனி எல்லை பாதுகாப்பு படை (சிஆர்பிஎப்) வீரர்கள், 5 கம்பெனிகள் எல்லை பாதுகாப்பு (பிஎஸ்எப்) படையை சேர்ந்த வீரர்கள் ஆவர்’’ என்றன.
The post மீண்டும் வன்முறையால் பதற்றம் மணிப்பூருக்கு மேலும் 20 கம்பெனி துணை ராணுவ படை விரைவு appeared first on Dinakaran.