புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில் கூறுகையில், ‘‘மகாராஷ்டிராவை போல எந்த மாநிலத்திலும் விவசாயிகள் முதுகில் பாஜ கடுமையாக குத்தியது இல்லை. வறட்சி காலங்களில் மோசமான விளைச்சல் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். 2024ம் ஆண்டைப்போல மழை அதிகமாக பெய்யும்போது விளைப்பொருட்களின் விலையில் திடீர் வீழ்ச்சியால் விவசாயிகள் இரட்டிப்பு பாதிப்பை எதிர்கொள்கின்றனர். மகாராஷ்டிராவில் 5 மில்லியன் ஹெக்டேரில் சோயாபீன் மற்றும் 4 மில்லியன் ஹெக்டேரில் பருத்தி பயிரிடப்படுகின்றது.
இந்த இரண்டு பயிர்களையும் பயிரிட்டுள்ள விவசாயிகள் தங்களை தாங்களே காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா விவசாயிகளின் முதுகில் பாஜ குத்தியுள்ளது. குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்குவதற்கு அவர்கள் மறுத்துள்ளனர். பீகாரின் தர்பங்காவுக்கு செல்லும் பிரதமரிடம் நான்கு கேள்விகள் கேட்கிறேன். தர்பங்கா எய்ம்ஸ் தாமதம் ஆனது ஏன்? 2015-2016ம் ஆண்டுஅப்போதைய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தர்பங்கா எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்தை அறிவித்தார்.
இந்த திட்டம் தொடங்குவதற்கு ஒன்பது ஆண்டுகள் ஆனது ஏன்? பிரதமர் இந்த தாமதத்துக்கான காரணத்தை வெளிப்படையாக கூறுவாரா? இந்திய வீடுகளில் தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் மோடி ஏற்கனவே பேசியிருக்கிறார். இது என்ன முதன்மையான விஷயம் பிரதமரே? முதலிடம் தருவதாக நீங்கள் கூறிய பொருட்களின் விலையானது தாறுமாறாக உயர்ந்து வருகின்றது. இதனால் காய்கறிகளின் பணவீக்கம் 42சதவீதம் உயர்ந்துள்ளது. உங்களது கொள்கைகளின் தோல்வியால் ஏழைகளின் தட்டுக்களில் இருந்து தக்காளி, வெங்காயம் உருளைக்கிழங்கு மறைந்து வருகின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post விலை உயர்வால் ஏழைகளின் தட்டுக்களில் இருந்து மாயமான தக்காளி, வெங்காயம்: காங்கிரஸ் விமர்சனம் appeared first on Dinakaran.