×
Saravana Stores

100% தேர்ச்சி, 100% வேலை வாய்ப்பு போலி உத்தரவாதங்களை தடுக்க பயிற்சி மையங்களுக்கு புதிய வழிகாட்டுதல்: ஒன்றிய அரசு நடவடிக்கை மீறுவோருக்கு அபராதம்

புதுடெல்லி: போலியான உத்தரவாதங்களை தடுக்க பயிற்சி மையங்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ஒன்றிய அரசு வௌியிட்டுள்ளது. இந்தியாவில் மாநில, ஒன்றிய அரசுகள் நடத்தும் போட்டி தேர்வுகள், நீட் உள்பட பல்வேறு படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதற்கான பயிற்சி அளிக்கும் மையங்கள், “எங்கள் பயிற்சி மையத்தில் சேர்ந்தால் 100% தேர்ச்சி, 100% வேலை வாய்ப்பு” என உத்தரவாதங்களை அள்ளி வீசுகின்றன. இந்நிலையில் பயிற்சி மையங்ககளை ஒழுங்குவடுத்துவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நேற்று வௌியிட்டது.

அதில், “பயிற்சி மையத்தில் அளிக்கப்படும் படிப்புகள் பற்றிய முக்கியமான தகவல்கள் மற்றும் அதன் காலவரையறை குறித்து தவறான உரிமை கோரல்களை வௌியிட கூடாது. பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களின் சான்றுகள், கட்டண முறைகள், பணத்தை திரும்ப பெறும் கொள்கைகள், தேர்வு விகிதங்கள், தேர்வு தரவரிசை, வேலை பாதுகாப்பு உத்தரவாதம், ஊதிய உத்தரவாதம் போன்றவை குறித்து தவறான அல்லது போலியான உத்தரவாதங்களை அளிக்க கூடாது. பொறுப்பு துறப்புகளை வெளியிட வேண்டும். தேர்வுக்கு பிறகு வெற்றி பெற்றவர்களின் உரிய எழுத்துப்பூர்வ அனுமதியின்றி வெற்றியாளர்களின் பெயர்கள், புகைப்படங்கள், சான்றுகளை பயன்படுத்த கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நுகர்வோர் விவகார செயலாளர் நிதி கரே செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ பயிற்சி மையங்கள் வேண்டுமென்றே தகவல்களை மாணவர்களிடம் இருந்து மறைக்கின்றன. இதை தடுக்கவே பயிற்சி மையங்களுக்கு புதிய வழிகாட்டு நெறிகள் வௌியிடப்பட்டுள்ளன. இதை மீறுவோருக்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் அபராதம் விதிக்கப்படும்” என தெரிவித்தார்.

The post 100% தேர்ச்சி, 100% வேலை வாய்ப்பு போலி உத்தரவாதங்களை தடுக்க பயிற்சி மையங்களுக்கு புதிய வழிகாட்டுதல்: ஒன்றிய அரசு நடவடிக்கை மீறுவோருக்கு அபராதம் appeared first on Dinakaran.

Tags : Union Govt. ,NEW DELHI ,Union government ,India ,NEET ,Dinakaran ,
× RELATED உச்ச நீதிமன்றத்தில் வழக்கு; மதுக்கடை,...