ஜார்க்கண்ட்: ஜார்க்கண்டில் நாளை சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மாவேயிஸ்ட் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். 81 தொகுதிகளை கொண்ட ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கான தேர்தல் நாளை மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 15 மாவட்டங்களில் உள்ள 43 தொகுதிகளில் 73 பெண்கள் உட்பட 683 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
முதல்கட்ட தேர்தலில் 2 கோடியே 7 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்நிலையில், மாவேயிஸ்ட் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஜார்கண்ட் தலைமை தேர்தல் அதிகாரி கே.ரவிக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், மாவோயிஸ்ட் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முதல்கட்ட தேர்தலுக்காக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயாராக இருப்பதாகவும் ஜார்கண்ட் தலைமை தேர்தல் அதிகாரி கே.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
The post ஜார்க்கண்டில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு.. மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி appeared first on Dinakaran.