மூத்த நிர்வாகிகள் மிரட்டல் எதிரொலி; பாஜவுடன் கூட்டணிக்கு தயாராகும் எடப்பாடி பழனிசாமி: அண்ணாமலையை ஓரங்கட்டும் மேலிடம்

சென்னை: மூத்த நிர்வாகிகள் மிரட்டல் எதிரொலியாக பாஜவுடன் கூட்டணி வைக்க எடப்பாடி பழனிசாமி தயாராகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில் கூட்டணிக்காக அண்ணாமலையைடெல்லி மேலிடம் ஓரங்கட்டத் தொடங்கியுள்ளதும் தெரியவந்துள்ளது.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜ, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அதிமுக 66 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜ 4, பாமக 5 இடங்களில் வென்றன. வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில்தான் அதிமுக கூட்டணி வெற்றி பெற முடிந்தது. பின்னர் பாஜவுக்கும், அதிமுகவுக்கும் கருத்து மோதல்கள் ஏற்பட்டது. ஜெயலலிதாவின் ஆட்சிதான், தமிழகத்தின் மோசமான ஆட்சி என்று அண்ணாமலை விமர்சித்தார். அதிமுக கட்சியின் பெயர் அண்ணா பெயரில் அமைந்துள்ளது. அந்த அண்ணாவையே அண்ணாமலை கோழை என்பதுபோல பேசினார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த எடப்பாடி பழனிச்சாமி, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதாக அறிவித்தார்.

கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் தலைமையில் கூட்டணியில் உள்ள கட்சிகள் இரு அணிகளாக பிரிந்து போட்டியிட்டு தோல்வியை தழுவின. 25 தொகுதிகளில் பாஜகவும், 15க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுகவும் டெபாசிட் இழந்தன. இதனால், மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி சேர வேண்டும் என்று அதிமுக தலைவர்கள் கூறி வந்தனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி, இதை திட்டவட்டமாக மறுத்து வந்தார். இந்தநிலையில், சில நாட்களுக்கு முன்னர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமான நண்பர் இளங்கோவன், அவரது உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதில் ரூ.40 கோடி கறுப்பு பணம் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தப் பணம், அதிமுகவின் முன்னணி தலைவருடைய பணம் என்றும், தகவல்கள் வெளியாகி வந்தன.

மேலும் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்கள் மற்றும் அவர்களது நண்பர்களின் வீடுகள், நிறுவனங்கள் குறித்து அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும் தகவல்களை சேகரித்து வந்ததாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் பாஜகவுடன் கூட்டணி சேர வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் கூறிவந்தனர். தனக்கும், தனது ஆதரவு முன்னாள் அமைச்சர்களுக்கும் ஒரே நேரத்தில் பிரச்னை ஆரம்பமாகி வருவதால் அவர் கொஞ்சம் இறங்கி வரத் தொடங்கிவிட்டார். ஒரு கட்டத்தில் கூட்டணியை ஏற்க மறுத்து வந்த எடப்பாடி பழனிச்சாமி, தற்போது கொஞ்சம் இறங்கி வந்துள்ளார். தேர்தல் நேரத்தில் கூட்டணியை முடிவு செய்யலாம் என்று நேற்று முன்தினம் திருச்சியில் அறிவித்தார். பாஜகவுடன் கூட்டணியே இல்லை என்றவர், தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று மாற்றிப் பேசத் தொடங்கியுள்ளார்.

அதற்கு முக்கிய காரணங்களாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை தேசிய தலைமை ஓரங்கட்டத் தொடங்கிவிட்டது. அவருக்கு தேசிய பொறுப்பு வழங்கி வேறு மாநில பொறுப்பாளராக நியமிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதை எடப்பாடி பழனிச்சாமிக்கும் தெரியப்படுத்தி விட்டதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் நோக்கமும் நிறைவேறி விட்டது. அதிமுக, பாஜக கூட்டணி அமைந்திருந்தால் அண்ணாமலை, ஒரு வேளை கோவையில் வெற்றி பெற்றிருப்பார். அப்படி வென்றிருந்தால், ஒன்றிய அமைச்சராகவும் ஆகியிருப்பார். ஒன்றிய அமைச்சராகி இருந்தால், அதிமுகவை ஒரு கை பார்த்து விடுவார். மாநில தலைவர் பதவியில் இருக்கும்போதே அதிமுகவை போட்டுப் பார்த்தவர், ஒன்றிய அமைச்சராக இருந்தால், அதிமுகவை காலி செய்திருப்பார். இதனால், அவரை வெற்றி பெறவிடாமல், தேசிய அளவில் முக்கியத்துவம் கிடைக்காமல் செய்ததில் எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் சாதுர்யம்தான் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். தற்போது அண்ணாமலை செல்லாக்காசாகிவிட்டார்.

அதேநேரத்தில் அதிமுக சில இடங்களில் வெற்றி பெற்று, ஒன்றிய அமைச்சர்களாக சிலர் ஆகியிருந்தாலும் அதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த லாபமும் இல்லை. ஒன்றிய அமைச்சர் பதவியில் இருப்பவர்கள் பாஜகவுடன் நெருக்கமாகி எடப்பாடியை ஓரங்கட்டும் வேலைகளில் இறங்கியிருப்பார்கள். தற்போது பதவியில் இல்லாததால் அதிமுக தலைவர்கள் அனைவருமே எடப்பாடி பழனிச்சாமியின் பின்னால் நிற்கிறார்கள். இதனால் கட்சியும் தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் கைக்குள் வந்து விட்டது. இதனால் கடந்த மக்களவை தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியின் வியூகம் வெற்றி பெற்றுள்ளதாக அதிமுகவினர் கருதுகின்றனர்.

அதேநேரத்தில் சட்டசபை தேர்தலில் கூட்டணி வைத்தால் அதிமுகவுக்குத்தான் லாபம் என்பதால் தற்போது கூட்டணிக்கு அவர் இறங்கி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதனால் தனது நிலைப்பாட்டை எடப்பாடி பழனிசாமி மாற்றத் தொடங்கியுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

The post மூத்த நிர்வாகிகள் மிரட்டல் எதிரொலி; பாஜவுடன் கூட்டணிக்கு தயாராகும் எடப்பாடி பழனிசாமி: அண்ணாமலையை ஓரங்கட்டும் மேலிடம் appeared first on Dinakaran.

Related Stories: