காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரியில் மேக்லியன் கால்வாயில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு

*தனி இடம் ஒதுக்கி தர கோரிக்கை

காவேரிப்பாக்கம் : காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி பகுதியில் மேக்லியன் கால்வாயில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே குப்பை கொட்ட தனி இடம் ஒதுக்கி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர். காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஓச்சேரி ஊராட்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியை சுற்றி ஆயர்பாடி, உத்திரம்பட்டு, தர்மநீதி, வேகாமங்களம், மாமண்டூர், கரிவேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் அமைந்துள்ளன.

இதன்காரணமாக பொது மக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும், ஓச்சேரி பஸ் நிறுத்தம் வந்து, சென்னை, காஞ்சிபுரம், ஒசூர், பெங்களூரு, சித்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் சென்று வருகின்றனர். மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த புதூர், பனமுகை, நாட்டேரி பிரம்மதேசம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொது மக்களுக்கும், இப்பகுதி பிரதான பஸ்நிறுத்தமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் ஓச்சேரி பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் வேலூர் மார்கமாக உள்ள பஸ் நிறுத்தம் அருகே, மேக்லியன் கால்வாய் பகுதியில் கொட்டி எரிக்கப்படுகின்றன. அப்போது வேலூர் மார்கமாக பஸ்சுக்காக காத்திருக்கும் பொது மக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், குழந்தைகள், என அனைத்து தரப்பினரும் மூச்சு திணறல்லால் அவதிப்படுகின்றனர்.

மேலும் புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகளும் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதேபோல் எஞ்சியுள்ள குப்பை கழிவுகளை அருகில் உள்ள மேக்லியன் கால்வாயில் கொட்டி எரிக்கப்படுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நிலம், நீர், காற்று ஆகியனவும் மாசு அடைவதாகவும், இதேபோல் கால்நடைகளும் பாதிப்புக்குள்ளாகி வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதேபோல் இங்குள்ள ஓட்டல், கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் முட்டை கழிவுகள், இலைகள் ஆகியனவும் சர்வீஸ் சாலையை ஒட்டி கொட்டப்படுகின்றன. எனவே ஊராட்சி நிர்வாகம் பொது மக்களின் நலன் மற்றும் மண் வளத்தை பாதுகாக்க குப்பைகள் கொட்ட உரிய இடம் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், கால்வாய், நெடுஞ்சாலை பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரியில் மேக்லியன் கால்வாயில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு appeared first on Dinakaran.

Related Stories: